கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை தர மறுப்பதா? தனியார் மருத்துவமனைகளுக்கு கெஜ்ரிவால் எச்சரிக்கை

டெல்லி:கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காணொலி வாயிலாக அவர் டெல்லி வாழ் மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க போதிய படுக்கை வசதிகள் உள்ளன. வென்டிலேட்டர் வசதிகளும் இருக்கின்றன.

ஆனால், சில தனியார் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை தர மறுக்கின்றன. அவ்வாறு செயல்படும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

படுக்கைகள் காலியாக இருப்பதை மறைத்து, அதிக பணம் தருவோரை அனுமதிக்கும் தவறான முறைக்கு சில நாட்களில் முடிவு கட்டப்படும். பிற கட்சித் தலைவர்களின் ஆதரவுடன் இத்தகைய செயல்களில் ஈடுபடும் மருத்துவமனைகள் அரசின் நடவடிக்கையில் இருந்து தப்ப முடியாது என்றார்.

முன்னதாக மருத்துவமனைகளில் எத்தனை படுக்கைகள் காலியாக இருக்கின்றன என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ள ஏதுவாக செயலியை  டெல்லி அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது.