டில்லி தலைமைசெயலாளர் தாக்கப்பட்ட வழக்கு: கெஜ்ரிவாலுக்கு டில்லி உயர்நீதி மன்றம் ஜாமின்

டில்லி:

டில்லி தலைமை செயலாளர் அன்ஷூ பிரகாஷ் டில்லி முதல்வர் கெஜ்ரிவால்  முன்னிலையில் ஆம்ஆத்மி கட்சி தலைவர்களால் தாக்கப்பட்ட வழக்கில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணைமுதல்வர் மனிஷ் சிசோடியா உள்பட ஆம்ஆத்மி கட்சியினருக்கு டில்லி உயர்நீதி மன்றம் முன்ஜாமின் வழங்கி உள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 20-ம் தேதி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் உள்பட முக்கிய அதிகாரிகள், ஆம்ஆத்மி தலைவர்கள், எம்எல்ஏக்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதத்தை தொடர்ந்து, தலைமை செயலாளர் அன்ஷூ பிரகாஷை ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் அமனாதுல்லா கான் மற்றும் பிரகாஷ் ஜார்வால் ஆகியோர் தாக்கியதாக புகார் எழுந்தது.

இது குறித்து தலைமைச் செயலாளர் அன்ஷூ பிரகாஷ் துணை நிலை ஆளுநரைச் சந்தித்து புகார் செய்தார்.  இதுகுறித்து டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாஷ் ஜார்வா, அமனாதுல்லா கானை கைது செய்தனர். பின்னர் இருவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் போலீசார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.  அதில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்பட 11 அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில், இந்த வழக்கு தொடர்பாக தங்களுக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும் என்று டில்லி முதல்வர் தரப்பில் இருந்து மனு தாக்கல் செய்யப்பட்டருந்தது.

இந்த வழக்கை விசாரித்த டில்லி உயர்நீதி மன்றம் அரவிந்த் கெஜ்ரிவால், மனிஷ் சிசோடியா உள்பட ஆம்ஆத்மி கட்சியினருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

மேலும், இந்த வழக்கு டிசம்பர் 7ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்று காவல்துறை தலைமை செயலாளர் தாக்கப்பட்டதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.