டெல்லி: டெல்லியில் கொரோனா வைரஸ் தாக்கம் குறையாத வரை பள்ளிகள் திறக்கப்படாது என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லி அரசு சார்பில் 74வது சுதந்திரதின விழா இன்று கொண்டாடப்பட்டது. முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் விழாவில் அவர் பேசியதாவது:

2 மாதங்களோடு ஒப்பிடுகையில் டெல்லியில் கொரோனா தாக்கம் கட்டுக்குள் இருக்கிறது. ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் வீட்டுக்குச் சென்றபின்பும் சுவாச கோளாறுகள் இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆகையால் அடுத்த வாரம் முதல் ஆக்ஸிஜன் அளிக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம்.

டெல்லியில் கொரோனா தாக்கம் குறைந்து முழுமையான மனநிறைவு அடையாதவரை பள்ளிகள் திறக்கப்படாது. கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுதல், பிளாஸ்மா தெரபி சிகிச்சை இரு முறையையும் டெல்லி அரசு தான் கொண்டு வந்தது. தலைநகரில் பொருளாதார வளர்ச்சியை மீட்டு கொண்டு வருவது சவாலான ஒன்று என்று பேசினார்.