டில்லி:

ராணுவ வீரர்கள், தேசிய, மாநில பிரபலங்களின் மரணத்தின் போது அவர்களின் உடலுக்கு தேசிய கொடி போர்த்தி மரியாதை செலுத்தும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. டில்லியில் தேசிய பறவையான மயில் ஒன்று இன்று இறந்துவிட்டது. இதற்கு தேசிய கொடி போர்த்தி இறுதி சடங்குகள் மேற்கொள்ளப்பட்டது.

டில்லி உயர்நீதிமன்றத்தின் வெளியே காயங்களுடன் இந்த மயிலை திலக் மார்க் போலீசார் மீட்டனர். ஜெயின் பறவைகள் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அதை பரிசோதித்த டாக்டர் மயில் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து டில்லி போலீசார் இறந்த மயில் உடலை தேசிய கொடியில் சுற்றி வைத்து மரியாதை செலுத்தினர். இதன் பின்னர் வனத்துறை அதிகாரிகள முன்னிலையில் போலீசார் மயிலை அடக்கம் செய்தனர்.

எனினும் மயில் உடலுக்கு தேசிய கொடி போர்த்தும் மரியாதை இது வரை நடைமுறையில் இல்லை என்றும், மேலும், மயில் உடலை போலீசார் அடக்கம் செய்தது வன உயிரின சட்ட விதிமீறலாகும் என்ற கருத்து எழுந்துள்ளது.