இளம்பெண்ணை தாக்கிய விவகாரம்: டில்லி போலீஸ்காரரின் மகன் கைது
டில்லி:
தலைநகர் டில்லியில், இளம் பெண் ஒருவரை இளைஞர் ஒருவர், கண்மூடித்தனமாக அடித்து உதைக்கும் காட்சிகள், சமூக வலை தளங்களில் வைரலானது.
இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சரின் உத்தரவின் பேரில் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அந்த இளைஞர் டில்லி போலீஸ்காரர் ஒருவரின் மகன் என்பது தெரிய வந்துள்ளது.
சமீபத்தில் டில்லியில் உள்ள ஒரு அலுவலகத்திற்குள் புகுந்த வாலிபர் அங்கு இருக்கும் இரண்டு பெண்களை சரமாரியாக தாக்கும் வீடியோ ஒன்று சமூகவளைதலத்தில் வைரலாக பரவியது. அந்த வீடியோவில் இளம் பெண்ணைத் தாக்கிய நபரின் பெயர் ரோகித் சிங் தோமர் என்பதும், அவர் டில்லி போலீஸ் அதிகாரியின் மகன் என்பதும், அவர் தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த வீடியோவை பார்த்த ,மத்திய உள்துறை அமைச்சர், ராஜ்நாத் சிங் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அந்த இளைஞரை கைது செய்ய டில்லி போலீஸ் கமிஷனர், அமுல்யா பட்னாயக்கிற்கு உத்தரவிட்டார்.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட பெண் டில்லி, துணை கமிஷனர் ஆன்டோ அல்போன்ஸாவிடம் புகார் கொடுத்தார். புகாரில், தாக்கப்பட்ட பெண் ரோகித்தை மணமுடிக்க இருந்தப் பெண் என்பதும்,. தன்னை, ரோகித் தோமர், அவரது நண்பரின் அலுவலகத்துக்கு அழைத்து அங்கு வைத்து அவர் தன்னை பலாத்காரம் செய்தார். நான் இது குறித்து போலீஸிடம் கூறுவேன் என்று சொன்ன போது என்னை தாக்க ஆரம்பித்தார்’ என்று புகாரில் கூறி உள்ளார்.
இதைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த தோமர், நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்டுள்ள தோமர், டில்லி போலீஸ் கான்ஸ்டபிள் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.