தலைமறைவான முத்திரை குத்தப்பட்ட டெல்லி தம்பதி தெலுங்கானா ரயில் நிலையத்தில் சிக்கினர்…

டெல்லி:

கொரோனா  அச்சுறுத்தல் காரணமாக கையில் தனிமைப்படுத்துதல் முத்திரை குத்தப்பட்ட டெல்லி தம்பதி, அங்கிருந்து திடீரென தலைமறைவான நிலையில், தெலுங்கானா மாநில ரயில் நிலையத்தில் அவர்களை காவல்துறையினர் மடக்கினர்.

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக, வெளிநாடுகளில் இந்தியாவிற்கு வருகை தரும் நபர்களிடம் பரிசோதனை செய்துவிட்டு, அவர்களுக்கு ஏதேனும் நோய் தொற்றுவதற்கான அறிகுறி தெரிந்தால், அவர்கள் கைகளில் முத்திரை குத்தப்பட்டு, அவர்கள் வீட்டில் தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.

அதுபோல, டெல்லியில் ஒரு தம்பதியினருக்கு கொரோனா அறிகுறி காரணமாக கையில் முத்திரை குத்தப்பட்டு, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனர். ஆனால், அந்த தம்பதி திடீரென காணாமல் போனது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், பேருந்து நிலையங்களில் விசாரித்து வந்த நிலையில், அந்த தம்பதி ரயில் மூலம் சென்றது தெரிய வந்தது.

பெங்களூர் டெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் அவர்கள் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து அந்த குறிப்பிட்ட ரயில் செல்லும் ரயில்நிலைய காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று தெலுங்கானா மாநிலத்தில் உள்ள காசிபட் ரயில் நிலையத்தில்,  காவல்துறையினர் திடீர் சோதனையிட்டபோது, தனிமைப்படுத்தப்பட்ட முத்திரையுடன் தலைமறைவான டெல்லி தம்பதியினர்  சிக்கினர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அழைத்துச் சென்றனர்.

அரசின் உத்தவை மீறி, ரயிலில் அவர்கள் பயணம் செய்துள்ளதால், அந்த ரயில் பெட்டியில் பயணம் செய்த மற்ற பயணிகளுக்கும் நோய்தோற்று சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து அந்த பெட்டி முழுவதும் சுத்திகரிக்கப்பட்டது.  இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குடிமக்கள் சமூக தூரத்தை கடைப்பிடிக்கவும், தனிமைப்படுத்தப்பட்ட தேவைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கொரோனா நோய் பரவலை தடுக்க நாம் ஒவ்வொருவரும், முக்கியமாக கைகளை சுத்தமாக கழுவுதல், கூட்ட நெரிசல் உள்ள இடங்களுக்கு செல்லாமல் தவிர்த்தல், ஒருவருக்கொருவர் இடைவெளி விட்டு இருத்தல் அவசியம்…