1981ம் ஆண்டில் லாகூருக்கு விமானம் கடத்தப்பட்ட வழக்கில் 2 சீக்கியர்கள் விடுதலை

டில்லி:

1981ம் ஆண்டில் லாகூருக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சீக்கிய அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் 2 பேர் டில்லி நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

1981ம் ஆண்டு டில்லி&ஸ்ரீநகர் இடையிலான ஏர் இந்தியா விமானம் 111 பாகிஸ்தான் நாட்டின் லாகூர் நகருக்கு கடத்தி செல்லப்பட்டது. இது தொடர்பாக 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் தல் கால்சா என்ற சீக்கிய அமைப்பை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். 3 பேர் தலைமறைவான குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர். கடத்தல்காரர்கள் காலிஸ்தான் வாழ்க கோஷம் போட்டதாக விமான சிப்பந்திகள் கூறிய தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கின் விசாரணை டில்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அஜய் பாண்டே கைது செய்யப்பட்ட தேஜிந்தர் பால் சிங் மற்றும் சாட்னம் சிங் ஆகியோரை விடுதலை செய்து உத்தரவிட்டார். இவர்கள் மீதான குற்றச்சாட்டை அரசு தரப்பு நிரூபிக்க தவறிவிட்டதாக நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதே குற்றச்சாட்டில் இருவரும் பாகிஸ்தான் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு சிறை தண்டனை அனுபவித்துள்ளனர். அதனால் தங்களை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று 1997ம் ஆண்டில் தேஜிந்தர் பால் சிங்கும், 1999ம் ஆண்டில் சட்னாம் சிங்கும் டில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஒரே சம்பவத்துக்கு 2 தண்டனைகள் விதிக்க முடியாது என்று குற்றம்சாட்டப்பட்டவர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த கருத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு இருவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.