டாக்டர்கள் எண்ணிக்கையை அதிகரியுங்கள் : டில்லி மருத்துவர்கள் வேண்டுகோள்

டில்லி

டில்லி மருத்துவமனைகளில் மருத்துவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என மருத்துவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

டில்லியில் உள்ள சஃப்தர்ஜங் மருத்துவமனையில் கடந்த வருடத்தில் இருந்து சுமார் 423 மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது.   அதே போல் டில்லியில் உள்ள  ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் 157 மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது.   இவ்விரு மருத்துவமனைகளிலும் அதிக அளவில் நோயாளிகள் வருகின்றனர்

இந்நிலையில் இந்த மருத்துவ மனைகளில் உள்ள வெளி நோயாளிகள் பிரிவில் அதிக அளவில் நோயாளிகள் வருவதால் வெளிநோயாளிகளை கவனிக்கும் நேரத்தை அதிகரிக்க டில்லி அரசு திட்டம் தீட்டியது.  ஒரு நாளில் சுமார் 12 மணி நேரம் வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க திட்டம் தீட்டி உள்ளது.

இதற்கு மருத்துவர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  அந்த சங்கத்தை சேர்ந்த மருத்துவர் ஒருவர், “டில்லியில் சஃப்தர்ஜங் மற்றும் ராம் மனோகர் லோகியா மருத்துவமனைகள் எய்ம்ஸ் மருத்துவமனையை விட அளவில் பெரியவை ஆகும்.   அதே நேரத்தில் இந்த இரு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் பற்றாக்குறை அதிகம் உள்ளது.

ஒரு நாளைக்கு 12 மணி நேர மருத்துவ சேவை  என்பது மிக நல்ல யோசனை ஆகும்.   ஆனால் மருத்துவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள போது அது நடைமுறைக்கு சாத்தியமாக இருக்காது.  எனவே மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள் எண்ணிக்கையை உடனடியாக அதிகரிக்க வேண்டும்.” என கூறி உள்ளார்.