தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியீடு: டெல்லியை மீண்டும் கைப்பற்றுகிறது ஆம் ஆத்மி

டெல்லி: தலைநகர் டெல்லி சட்டசபை தேர்தலில் மீண்டும் ஆம் ஆத்மி கட்சியே வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் தெரிய வந்திருக்கிறது.

70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்ட சபைக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி முடிவடைந்தது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக இடையே கடும் போட்டிகாணப்பட்டது.

இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு முடிவுகள் வெளியிடப் பட்டுள்ளன. அனைத்த முடிவுகளிலும், ஆம் ஆத்மி கட்சியே மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டைம்ஸ் நவ் தமது கருத்து கணிப்பில் ஆம் ஆத்மி 44 இடங்களிலும் பாஜக 26 இடங்களிலும் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது. காங்கிரஸ் 1 இடத்தில் கூட வெற்றி பெறவாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிபப்ளிக் தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பில் ஆம் ஆத்மி 48 முதல் 61 இடங்களையும் கைப்பற்றுகிறது. பாஜக 9 முதல் 21 இடங்களையும் காங்கிரஸ் 1 இடத்தையும் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது.

நியூஸ் எக்ஸ் கருத்து கணிப்பில் ஆம் ஆத்மி 50 முதல் 56 இடங்களையும் பாஜக 10 முதல் 14 இடங்களையும் கைப்பற்றும். காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூஸ் நேசன் நடத்திய கருத்து கணிப்பு முடிவில் ஆம் ஆத்மி கட்சி 55 இடங்களிலும், பாஜக 14 இடங்களிலும்  வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. காங்கிரசுக்கு ஒரு இடம் தான் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியா டுடே நடத்திய கருத்து கணிப்பில் ஆம் ஆத்மி கட்சியுடன் 59 முதல் 68 இடங்களை கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது. பாஜகவுக்கு 2 முதல் 11 இடங்களும்,  காங்கிரசுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி சட்டசபை குறித்த அனைத்து தரப்பினர் நடத்திய கருத்து கணிப்புகளிலும் ஆம் ஆத்மி அசுர பலத்துடன் வென்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளதால் அக்கட்சி தொண்டர்கள் குஷியாகி இருக்கின்றனர்.

கார்ட்டூன் கேலரி