டில்லி : பாராளுமன்றத்தை நோக்கி நகரும் விவசாயிகள் பேரணி

டில்லி

கில இந்திய விவசாயிகள் சங்க உறுப்பினர்கள் டில்லியில் பாராளுமன்றத்தை நோக்கி மாபெரும் பேரணி நடத்தி வருகின்றனர்.

அகில இந்திய விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு சார்பில் இன்று டில்லியில் விவசாயிகள் பேரணிக்கு அழைப்பு விடப்பட்டது. அதில் கலந்துக் கொள்ள இன்று காலை முதல் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டில்லியில் ராம்லீலா மைதானத்தில் கூடினார்கள். விவசாயிகளின் பயிர்க்கடன், விவசாயப் பொருட்களுக்கு சரியான விலை உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்காக இந்த பேரணிக்கு அழைப்பு விடப்பட்டிருந்தது.

இந்த மாநாட்டில் கலந்துகொள்ள ஆந்திரப் பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம், மகராஷ்டிரா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், மற்றும் உத்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து விவசாயிகள் வந்தனர். ரெயில், பேருந்துகள் என பலவகைப்பட்ட போக்குவரத்து மூலம் தலைநகர் வந்த அனைத்து விவசயிகளும் ராம்லீலா மைதானத்தில் கூடினார்கள்.

தற்போது விவசாயிகள் பேரணி பாராளுமன்ற தெருவை அடைந்துள்ளது. இந்த பேரணிக்காக சுமார் 3500 காவலர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.