வழி விடாத ஆட்டோ ஓட்டுநரை துப்பாக்கியால் சுட்ட டில்லிப் பெண்

டில்லி

டில்லியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒரு பெண் தனக்கு சாலையில் வழி விடாத ஆட்டோ ஓட்டுநரை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

டில்லி நகரில் பவானி என்கிளேவ் என்னும் பகுதி உள்ளது.   அப்பகுதியில் ஒரு ஆட்டோ ஓட்டுநர் சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது மொபைல் அழைப்பு வந்துள்ளது.    அதனால் சாலையில் வண்டியை நிறுத்தி விட்டு பேச ஆரம்பித்துள்ளார்.   அப்போது அங்கு அவர் பின்னால் இரு சக்கர வாகனத்தில் சப்னா என்னும் பெண் வந்துள்ளார்.  அ வர் ஆட்டோ ஓட்டுநரிடம் வழி விடச் சொல்லி உள்ளார்.    இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றி உள்ளது.

அக்கம் பக்கம் உள்ளோர் இருவரையும் சமாதானப்படுத்திய பின் சப்னா அங்கிருந்து சென்றுள்ளார்.   வீட்டுக்குச் சென்ற சப்னா தனது வீட்டில் இருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கியை எடுத்து வந்து ஆட்டோ ஓட்டுநரை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.  ஆனால் ஆட்டோ ஓட்டுநர் மீது குண்டு எதுவும் பாயவில்லை.  அதனால் மீண்டும் துப்பாக்கியில் சப்னா குண்டுகளை நிரப்ப ஆரம்பித்துள்ளார்.

அருகில் இருந்தவர்கள் அவரிடம் இருந்து துப்பாக்கியை பிடுங்கி உள்ளனர்.  அத்துடன் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ள்னர். அங்கு விரைந்து வந்த காவல் துறையினர் சப்னாவையும் அந்த ஆட்டோ ஓட்டுநரையும் கைது செய்து காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ள்னர்.   இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் அந்த பகுதி மிகவும் பரபரப்பானது.