டில்லி மாசு : நகராட்சிகளுக்கு ரூ.25 கோடி அபராதம் விதித்த மாநில அரசு

டில்லி

டில்லியில் மாசு காரணமாக நகராட்சிகளுக்கு டில்லி மாநில அரசு ரூ.25 கோடி அபராதம் விதித்துள்ளது.

டில்லியில் நாளுக்கு நாள் சுற்றுச்சூழல் மிகவும் மாசடைந்து வருகிறது. உலக நகரங்களில் மிகவும் அதிகமாக மாசடைந்த நகரங்களில் டில்லியும் ஒன்றாக உள்ளது. இதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக பல புகார்கள் எழுந்தும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.  டில்லி வாழ் மக்களான சதீஷ்குமார் மற்றும் மகாவீர் சிங் ஆகியோர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அரசுக்கு எதிராக  மனு அளித்தனர்.

இந்த மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் தனது தீர்ப்பில் மாசு கட்டுப்பாடு நடவடிக்கைகள் எடுக்காத டில்லி அரசை கடுமையாக கண்டித்தது. அத்துடன் டில்லியின் வட கிழக்கு பகுதிகளில் குறிப்பாக முண்டிகா, திக்ரி கலன், ரன்ஹோலா வில் ஏராளமான தோல், பிளாஸ்டிக், ரப்பர் உள்ளிட்ட பொருட்கள் கொளுத்தப் படுவதால் கடும் மாசு ஏற்படுவதாக குற்றம் சாட்டிய தீர்ப்பாயம் டில்லி மாந்ல அரசுக்கு ரூ.25 கோடி அபராதம் விதித்தது.

டில்லி அரசின் நகர மேம்பாட்டுத் துறை பொதுச் செயலர் ராஜிவ் யதுவன்ஷி, “பிளாஸ்டிக் கழிவு அழித்தல் விதி ஆறின் படி இந்த நடவடிக்கைகளை கவனிக்க வேண்டியது நகராட்சிகளின் பொறுப்பாகும். ஆகவே இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத வடக்கு டில்லி மற்றும் தெற்கு டில்லி நகராட்சிகளே இதற்கு பொறுப்பாகும். அதனால் வடக்கு டில்லி நகராட்சி ரூ.18 கோடியும் தெற்கு டில்லி நகராட்சி ரு.7 கோடியுமாக அபராதத் தொகையை வழங்க வேண்டும்” என கடிதம் எழுதி உள்ளார்.

இதற்கு நகராட்சி அதிகாரிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். டில்லி மாநில அரசு இதுவரை பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை குறித்த கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் எதுவும் அறிவிக்கவில்லை எனவும் தங்கள் மின் உற்பத்தி திட்டத்தில் இந்த கழிவுகளை எரித்து உபயோகிக்க மாநில அரசிடம் அனுமதி பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

டில்லி அரசு இது குறித்து எவ்வித பதிலும் அளிக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published.