கன்னையா குமார் மீது தேச துரோக வழக்கு: டெல்லி அரசு ஒப்புதல்

டெல்லி: தேசத்துரோக வழக்கில் முன்னாள் ஜேஎன்யு மாணவர் தலைவர் கன்னையா குமார் மீது வழக்கு தொடர டெல்லி அரசு போலீசாருக்கு ஒப்புதல் அளித்தது.

நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல் குருவின் மரண ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், 2016ம் ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம் நடைபெற்றது.

அந்த போராட்டத்தின் போது, இந்தியாவுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டதாக தெரிகிறது. குமார், உமர் காலித் மற்றும் அனிர்பன் பட்டாச்சார்யா தலைமையிலான ஜேஎன்யூ மாணவர்கள் குழு தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தின் போது பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று முழங்கியதாக தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பப்பட்டன. இந்த காட்சிகள் பின்னர் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு அவை உண்மை தான் என்று கண்டறியப்பட்டது.

இந் நிலையில், தேசத்துரோக வழக்கில் ஜேஎன்யூ முன்னாள் மாணவர் தலைவர் கன்னையா குமார் மீது வழக்குத் தொடர டெல்லி அரசு போலீசாருக்கு ஒப்புதல் அளித்தது.

உமர் காலித், அனிர்பன் பட்டாச்சார்யா, அகிப் உசேன், உமர் குல் மற்றும் முஜீப் ஆகிய பலர் மீது தேசத்துரோக சம்பவத்தில் வழக்கு தொடரப்படும்.

கார்ட்டூன் கேலரி