டில்லி

ழைநீர் சேகரிப்பு அடிப்படையில் யமுனை நதி நீரை சேகரிக்க டில்லி அரசு திட்டம் தீட்டி உள்ளது.

நாடெங்கும் நீர் பஞ்சம் நிறைந்துள்ள நிலையில் தலைநகர் டில்லியில் நீர் பஞ்சம் அதிகமாக உள்ளது. கங்கை நதியின் முக்கிய துணை நதியான யமுனை நதி டில்லி நகர் வழியாக ஓடிய போதிலும் கோடை காலத்தில் நகரில் கடும் தண்ணீர் பஞ்சம் உள்ளது. இதை நீக்க மழை நீர் சேகரிப்பு திட்டத்தின் அடிப்படையில் யமுனை நீர் சேகரிப்பை நடத்த டில்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “மழைக்காலங்களில் யமுனை நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் போது அந்த நீரை சேகரிக்க சோதனை அளவில் 20 கிமீ தூரத்தில் சிறு சிறு குட்டைகள் அமைத்து சேகரிக்க உள்ளோம். இந்த திட்டம் பல்லாவில் இருந்து வாஜிராபாத் வரை அமைக்கப்பட உள்ளது.

இந்த நதி ஓரங்களில் உள்ள நிலங்கள் முதலில் விளை நிலங்களாக இருந்தன.  இந்த நிலங்களை விவசாயிகளிடம் இருந்து வாடகைக்கு பெற உள்ளோம். இந்த குட்டைகளில் சிமிண்ட் பூசப்படமாட்டாது. இதற்கு ரூ.50 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது டில்லி நகரில் நிலத்தடி நீர் மட்டம் மிகவும் குறைந்துள்ளது. இந்த குட்டைகள் அமைப்பதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயர மிகவும் வாய்ப்புள்ளது.  யமுனை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடும் போது அந்த நீர் இந்த குட்டைகளில் சேகரிக்கப்படும்.

இந்த குட்டைகளில் உள்ள நீர் மூலம் வெள்ளம் இல்லாத காலங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறையாமல் இருக்கும். இந்த சோதனை வெற்றி அடைந்த பிறகு இந்த திட்டம் மேலும் 52 கிமீ தூரத்துக்கு விஸ்தரிக்கப்படும். தற்போதைய பருவ மழையின் போது இந்த சோதனை திட்டம் நிறைவேற்றப்படும்” என தெரிவித்துள்ளார்.