கர்நாடக இசைக்கலைஞர் விழாவுக்கு உதவத் தயார் : டில்லி அரசு

டில்லி

விமான நிலைய ஆணையத்தால் ரத்து செய்யப்ப்பட்ட கர்நாடக இசைக்கலைஞர் டி எம் கிருஷ்ணா கச்சேரிக்கு உதவ டில்லி அரசு முன் வந்துள்ளது.

சென்னையை சேர்ந்த பிரபல கர்நாடக இசைக்கலைஞர் டி எம் கிருஷ்ணா. இவர் தனது ஆறு வயதில் இருந்து கர்நாடக சங்கீதம் பயின்று வருகிறார். இவர் பொருளாதாரத் துறையில் பட்டம் பெற்றவர். இவர் இசை குறித்த மூன்று புத்தகங்களை எழுதி உள்ளார். இவர் மகசசே விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆகஸ்ட் மாதம் இவர் கர்நாடக இசையில் கிறித்துவ மற்றும் இஸ்லாமியப் பாடல்கள் பாடுவதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அதற்காக இவருக்கு வலது சாரி இயக்கத்தினர் கடும் மிரட்டல் விடுத்தனர். அதை ஒட்டி தாம் ஒவ்வொரு மாதம் ஏசு மற்றும் அல்லாவின் கர்நாடக இசை பாடலகளை வெளியிடப் போவதாக கிருஷ்ணா அறிவித்தார்.

இதை ஒட்டி சமூக வலைத் தளங்களில் கிருஷ்ணா கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
டில்லியில் விமான நிலைய ஆணையம் சார்பில் வரும் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் ஒரு மாபெரும் இசை மற்றும் நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் டி எம் கிருஷ்ணா கலந்துக் கொள்வதாக இருந்தது. இந்த நிகழ்ச்சி திடீரென தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டதாக நேற்று. அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பில் ஒரு சில அவசர சூழ்நிலைகளால் இந்த நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டதாக குறிப்பிடப் பட்டிருந்தது. சமூக வலைத் தளங்களில் அவர் மீது எழுந்த கடும் விமர்சனத்தினால் இந்த நிகழ்ச்சி தள்ளி வைக்கபட்டுள்ளதாக பலரும் கூறலானார்கள். ஆனால் அதை விமான நிலைய ஆணையம் மறுத்துள்ளது.

இந்நிலையில் டில்லியை ஆட்சி செய்யும் ஆம் ஆத்மி அரசு இது குறித்து அக்கறை கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆம் ஆத்மி அரசில் துணை முதல்வராக உள்ள மனிஷ் சிசோடியா டி எம் கிருஷ்ணவுடன் இந்த விவகாரம் குறித்து பேசி உள்ளார். அத்துடன் டி எம் கிருஷ்ணாவின் கச்சேரிக்கு டில்லி அரசு உதவ தயாராக உள்ளதாக அப்போது தெரிவித்துள்ளார்.