சிவப்பு மண்டலத்தில் சரக்கு கடை..  ‘சேப்டி’ இடம்  தேடும் டெல்லி அரசு..

மூன்றாம் முறையாக ஊரடங்கை அமல் படுத்தியுள்ள மத்திய அரசு, மாநில அரசுகளுடன் சில சமரசங்களைச் செய்து கொண்டுள்ளது.

’’மதுக்கடைகளை மூடும் விஷயத்தில் பிடிவாதமாக இருக்கக்கூடாது’’ என்று சில மாநில அரசுகள் வேண்டுகோள் வைத்ததால், அதனை ஏற்றுக்கொண்டது, டெல்லி மத்திய அரசு.

இந்த முறை சிவப்பு மண்டலங்களில் கூட மதுக்கடைகளைத் திறக்க அனுமதி அளித்துள்ளது.

ஆனால் ’’பேருக்கு’’ சில நிபந்தனைகளை விதித்துள்ளது.

டெல்லி மாநில ஆம் ஆத்மி அரசு இந்த நிபந்தனைகளை ஏற்றுச் சரக்கு கடைகளைத் திறக்க முழுவீச்சில் களம் இறங்கியுள்ளது.

டெல்லியில் மொத்தம் 11 மாவட்டங்கள் உள்ளன.

11 மாவட்டங்களும் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

டெல்லி மாநகரில் மால்கள் நீங்கலாக 420 மதுபானக்கடைகள் உள்ளன.

இவற்றில் எந்தெந்த கடைகளை, விதிகளுக்கு உள்பட்டுத் திறக்கலாம் என ஆய்வு செய்யுமாறு, சுற்றுலா வளர்ச்சி கழகம்,சிவில் சப்ளை உள்ளிட்ட நான்கு துறைகளுக்கு ஆணையிட்டுள்ளது, ஆம் ஆத்மி அரசாங்கம்.

ஆய்வு செய்து உடனடியாக அறிக்கை தருமாறு மாநில அரசு உத்தரவிட்டுள்ளதால், விரைவில் டெல்லியில் மதுக்கடைகள் திறக்கப்படும்.

– ஏழுமலை வெங்கடேசன்