டில்லி

ந்தியா புல்ஸ் நிறுவனம் குறித்து அவதூறு கருத்துக்கள் தெரிவிக்க சுப்ரமணியன் சாமிக்கு டில்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த பாஜக தலைவருமான சுப்ரமணியன் சாமி அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.   அவர் தனது கட்சியின் அரசில் முன்பு நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி மற்றும் தற்போதைய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோருக்குப் பொருளாதாரம் குறித்து ஏதுவும் தெரியாது என விமர்சித்து சர்ச்சையைக் கிளப்பினார்.

அந்த சர்ச்சை அடங்கும் முன்னர் பிரதமருக்கு அவர் எழுதிய கடிதத்தில், “இந்தியா புல்ஸ் என்னும் நிதி நிறுவனம் பல போலி நிறுவனங்களைத் தொடங்கியது.  அவற்றின் மூலம் தேசிய வீட்டு வசதி வங்கியிடம் இருந்து ரூ.1 லட்சம் கோடி  கடனாகப் பெற்று மோசடி செய்துள்ளது.  இந்த விவகாரத்தில் முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் மற்றும் அரியானா முன்னாள்  முதல்வர் ஹூடா ஆகியோருக்கு தொட்ர்பு உள்ளது ” எனக் குற்றம் சாட்டி இருந்தார்.

இதைத் தொடர்ந்து பிகுரூஸ் என்னும் இணைய தளம் இந்த தகவலை வெளியிட்டது.  அத்துடன் இந்தியா புல்ஸ் நிறுவனத்துக்கு எதிராக பல கேலி சித்திரங்களையும் கருத்துக்களையும் வெளியிட்டது.   இதனால் இந்தியா புல்ஸ் பங்குகளின் விலை கடுமையாகச் சரிந்தன.    எனவே சுப்ரமணியன் சாமி மற்றும் பிகுருஸ் ஆகியோரை எதிர்த்து நிறுவனத்தின் சார்பில் டில்லி உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ராஜிவ் நாயரால் வழக்கு தொடரப்பட்டது.

இந்தியா புல்ஸ் சார்பில் சுப்ரமணியன் சாமி மற்றும் பிகுருஸ் இணைய  தள கேலிச் சித்திர வரைவாளர்கள் தங்கள் நிறுவனத்தின் மீது போலிக் குற்றச்சாட்டு அளித்துள்ளதாகவும் இதனால் தங்கள் நற்பெயருக்குக் களங்கம் உண்டாகி இருப்பதாகவும் கூறப்பட்டது.   அத்துடன் இது குறித்து எவ்வித விசாரணைக்கும் தயார் எனத் தெரிவித்த நிறுவனம்  விசாரணையில் தங்கள் மீது குற்றம் உள்ளதாகத் தெரியும் வரை எவ்விதமான கருத்துக்களும் வெளியிடத் தடை செய்யுமாறு கேட்டுக் கொண்டது.

இந்த வழக்கை விசாரித்த டில்லி உயர்நீதிமன்றம்  ”நிறுவனத்தின் மீது சுப்ரமணியன் சாமி மற்றும் பிகுருஸ் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித அடிப்படை  ஆதாரமும் அளிக்கப்படவில்லை.  எனவே இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து தற்போது நீதிமன்றம் விசாரணை இன்றி முடிவு எடுக்க முடியாது.   ஆகவே இந்த விசாரணை தொடங்கித் தீர்ப்பு வரும் வரை சுப்ரமணியன் சாமி, பிகுருஸ் உள்ளிட்ட யாரும் இந்தியா புல்ஸ் குறித்து சமூக வலைத்தளங்களில் அல்லது செய்தி ஊடகங்களில் கருத்து பதியக் கூடாது” என உத்தரவிட்டுள்ளது.