டெல்லி: உறுப்பினர்களை  புதுப்பிக்குமாறு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தை டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது.
தலைநகர் டெல்லியில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் பலர் இன்னும் கட்டுமான வாரியத்தில் உறுப்பினர்களாக தங்களை பதிவு செய்து கொள்ளவில்லை.
இந் நிலையில் அவர்களின் நலன்களை காக்கும் வகையில் டெல்லி உயர்நீதி மன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, தொழிலாளர் துறையின் கீழ் வரும் டெல்லி கட்டிடம் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர் நல வாரியமானது, அனைத்து தொழிலாளர்களின் உறுப்பினர்களையும் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சமூக ஆர்வலர் சுனில் குமார் அலெடியா என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவின் அடிப்படையில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட கட்டுமான தொழிலாளர்களுக்கான இழப்பீட்டை உடனடியாக விடுவிக்கவேண்டும் என்று கூறி உள்ளது.
ஒவ்வொரு மாநிலத்திலும் இதுபோன்ற வாரியம் உள்ளது. அவர்களுக்கான நலத்திட்டங்கள் இதன் மூலம் வழங்கப்படுகிறது. இந்தச் சட்டத்தின் கீழ், ஒரு கட்டிடத் தொழிலாளி 12 மாதங்களில் 90 நாட்களுக்கு குறையாமல்  கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்தால் மட்டுமே பதிவு செய்ய தகுதியுடையவர். பதிவு ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.