டில்லி

ஞாயிற்றுக் கிழமை அன்று  டில்லி முகர்ஜி நகர் பகுதியில் காவல்துறையினர் நிகழ்த்திய வன்முறைக்காக டில்லி உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

டில்லி நகரில் மிகவும் போக்குவரத்து நிறைந்த பகுதியான முகர்ஜி நகர் பகுதியில் சாலை ஓரத்தில் ஒரு காவல்துறை வாகனம் நின்றுக் கொண்டிருந்தது.  அந்த வழியாக வந்த ஒரு சரக்கு ஆட்டோ மோதியதால் காவலருக்கும் ஆட்டோ ஓட்டுனரான சீக்கியருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.   சீக்கிய ஓட்டுனரை ஐந்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் லத்தியால் அடிக்க தொடங்கி உள்ளனர்.

சீக்கியர்கள் எப்போதும் ஒரு கத்தியை வைத்திருப்பது வழக்கமாகும்.   அந்த சீக்கிய ஓட்டுனர் கத்தியை எடுத்து காவல்துறையினரை விரட்டி உள்ளார்.   அவர்கள் பின் வாங்கவே அவர் துரத்தி உள்ளார்.    இதை ஒட்டி அவரை பிடித்த காவல்துறையினர் நடு சாலையில் அவரை அடித்து இழுத்து சென்றுள்ளனர்.   அந்த ஆட்டோ ஓட்டுனரின்  மகன் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தனது தந்தையை காவல்துறையினர்  அடிப்பதை அந்த சிறுவன் தடுக்க முயன்றுள்ளார்.  காவல்துறையினர் அவர் சிறுவர் என்பதையும் கவனியாமல் அவரையும் தாக்கி இழுத்துச் சென்றனர்.   இதை ஒருவர் வீடியோ பதிவு செய்து சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ளார்.  இந்த வீடியோ வைரலாகியது.  இவ்வாறு வெளியான இரு வீடியோக்களில் ஒன்றில் ஆட்டோ ஓட்டுனர் கத்தியுடன் காவலர்களை துரத்துவதும் மற்றதில் காவல்துறையினர் அடித்து இழுத்துச் செல்வதும் பதிவாகி உள்ளது.

இந்த நிகழ்வுக்கு டில்லி உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.   உயர்நீதிமன்றம் டில்லிக்கு அளித்துள்ள நோட்டிசில் காவல்துறையினர் இவ்வாறு பொதுமக்களிடம் கடுமையாக நடந்துக் கொண்டால் அதுவும் சிறுவர்களிடம் இப்படி நடப்பது மக்களிடையே பயத்தை உண்டாக்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது..

டில்லி காவல்துறை மத்திய அரசின் கீழ் இயங்கி வருகிறது.   ஏற்கனவே மத்திய அரசின் பல செய்கைகளை டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சித்து வருகிறார்.   தற்போது டில்லி உயர்நீதிமன்றம் காவல்துறையை கடிந்துக் கொண்டதற்கு அவர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.