நிர்பயா குற்றவாளிகளுக்கு மார்ச்-3ந்தேதி காலை தூக்கு! டெல்லி உயர்நீதி மன்றம் அறிவிப்பு

டெல்லி:

நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் தேதியை டெல்லி உயர்நீதி மன்றம் அறிவித்து உள்ளது. அதன்படி, மார்ச் 3ந்தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட உத்தரவிட்டு உள்ளது.

டெல்லி மருத்துவமாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், குற்றவாளிகள் தொடர்ந்த பல்வேறு முறையீடு வழக்கு காரணமாக, தூக்கில் போடுவது குறித்து 2 முறை தேதிகள் குறிக்கப்பட்டு, பின்னர் தடை விதிக்கப்பட்டு, குற்றவாளிகள் தூக்கிலேற்றப்படுவதில் இருந்து தப்பித்து வந்தனர்.

இதுதொடர்பான அனைத்து முறையீடு வழக்குகளும் விசாரணை நடந்தி, தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், டெல்லி உயர்நீதி மன்றமே குற்றவாளிகளை தூக்கிலிடும் புதிய தேதியை அறிவிக்கலாம் என உச்சநீதி மன்றம் பச்சைக் கொடி காட்டியது.

இதைத்தொடர்ந்து திகார் சிறை சார்பில் டெல்லி உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பான விசாரணையின்போது, அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா  ஆஜராகி குற்றவாளிகளை உடனே தூக்கிடும் தேதியை அறிவிக்க கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பான விசாரணைகள் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி குற்றவாளிகள் நான்கு பேருக்கும் மார்ச் 3ந்தேதி காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளார்.