Random image

டில்லி பல்கலைக்கு மின்னணு வாக்கு இயந்திரங்களை பத்திரப்படுத்தி வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

டில்லி

டில்லி பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் பயன்படுத்தப்பட்ட  மின்னணு வாக்கு இயந்திரங்களை பத்திரப்படுத்தி வைக்க டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி டில்லி  பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தல் நடைபெற்றது.   இந்த தேர்தலில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் உபயோகிக்கப் பட்டதால் மின்னணு வாக்கு இயந்திரங்களில் மோசடி நடப்பதாக குற்றச்சாட்டுக்கள் நிலவி வருகின்றன.   அதனால் மாணவர்கள் இடையே மின்னணு இயந்திர உபயோகத்துக்கு கடும் எதிர்ப்பு இருந்தது.   ஆயினும் நிர்வாகம் இந்த இயந்திரங்களை பயன்படுத்தியது.

இந்த தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மின்னணு இயந்திரங்களில் முறைகேடு நடந்ததாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது.   ஆனால் தலைமை தேர்தல் அதிகாரி இந்த மின்னணு இயந்திரங்களை ஆணையம் வழங்கவில்லை எனவும் தனியாரிடம் இருந்து வாங்கப்பட்டதாகவும் அறிக்கை அளித்தார்.   இது மேலும் பரபரப்பை உண்டாக்கியது.    இதை ஒட்டி மூன்று மாணவர்கள் டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு  மனு ஒன்றை அளித்துள்ளனர்.

மாணவர்களான சன்னி சில்லர், மீனா மற்றும் சௌரப் யாதவ் ஆகியோர் தங்கள் மனுவில் மின்னணு வாக்கு இயந்திரத்தில் மோசடி நடந்துள்ளதாகவும் அதனால் அந்த இயந்திரங்களில் உள்ள விவரங்கள் அழிக்கபடலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.   இதை ஒட்டி டில்லி உயர்நீதிமன்றம் இந்த மின்னணு வாக்கு இயந்திரங்களை பத்திரப்படுத்தி வைக்க வேண்டும் என டில்லி பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.