தொழிற்சாலைகளுக்கு ஆக்சிஜன் விநியோகம் உடனடி நிறுத்தம் : டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

டில்லி

கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அதிக அளவில் தேவைப்படுவதால் தொழிற்சாலைகள் விநியோகத்தை உடனடியாக நிறுத்த டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது.

டில்லியில் கொரோனா தீவிரமாகப் பரவி வருகிறது.   டில்லியில் தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தைத் தாண்டி வருகிறது.  நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  இது குறித்து டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி அதிக அளவில் ஆக்சிஜன் ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆக்சிஜன் தேவைகளை கவனித்து கொள்வது மாநில அரசுகளின் பொறுப்பு என அறிவித்தது கடும் சர்ச்சையை உண்டாக்கியது.   இந்நிலையில் டில்லி உயர்நீதிமன்றத்தில் பல கொரோனா நோயாளிகளுக்கு போதுமான அளவு ஆக்சிஜன் இன்றி உயிரிழப்பதாகவும் இதற்கான தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் ஒரு பொதுநல வழக்குப் பதியப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த டில்லி உயர்நீதிமன்றம், “நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும் மருத்துவ தேவைக்கான ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதையும் இந்த நீதிமன்றம் கவனித்து வருகிறது.  இந்த பாதிப்பு மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், குஜராத், டில்லி, உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, தமிழகம், அரியானா, பஞ்சாப்,. ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகம் உள்ளது.,

எனவே தற்போது தொழிற்சாலைகளுக்கு விநியோகம் செய்யப்படும் ஆக்சிஜன் வாயுவை உடனடியாக நிறுத்தி அவற்றை மருத்துவ சேவைகளுக்கு மாற்ற வேண்டும்.  இதன் மூலம் பல உயிர்களைக் காக்க முடியும்.  தொழிற்சாலைகள் ஆக்சிஜன் இன்றி சமாளித்துக் கொள்ளும்.   ஆனால் மனித உயிர்களால் அது சாத்தியமில்லை.”  என உத்தரவிட்டுள்ளது.