டில்லி

சிறுமிகளை பலாத்காரம் செய்வோருக்கு தூக்குதண்டனை அளிக்கும் சட்டம் குறித்து மத்திய அரசுக்கு டில்லி உயர்நீதிமன்றம் கேள்விகளை எழுப்பி உள்ளது.

சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெருகி வருகின்றன.   இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு தூக்கு தண்டனை வழங்க அவசரச் சட்டம் ஒன்று இயற்றப்பட்டது.   அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.   இந்நிலையில் முன்பு தொடரப்பட்ட பாலியல் குற்றச் சட்டம் குறித்த வழக்கு ஒன்று நேற்று டில்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

பாலியல் குற்ற வழக்குகளில் சட்டம் தவறாக பயன்படுத்துவகாக தொடரப்பட்ட இந்த வழக்கை கீதா மிட்டல் மற்றும் ஹரிசங்கர் ஆகியோரின் அமர்வு விசாரித்து வருகிறது.    தற்போது இயற்றப்பட்ட புதிய அவசரச் சட்டம் குறித்து இந்த அமர்வு கேள்விகளை எழுப்பி உள்ளது.

அமர்வு, “மத்திய அரசு இயற்றி உள்ள இந்த சட்டத்தில் இத்தகைய பாலியல் குற்றங்களுக்கு அடிப்படை காரணம் என்ன என்பதை பற்றி சிந்திக்கவில்லை.   மேலும் 18 வயதுக்குட்பட்ட குற்றவாளிகள் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கு என்ன செய்வது என்பதைப் பற்றியும் மத்திய அரசு ஏதும் கூறவில்லை.    சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களில் பலர் உறவினர்களாகாவோ அல்லது தெரிந்தவர்களாகவோ தான் உள்ளனர்.

இத்தகைய பாலியல் குற்றவாளிகளுக்கான தண்டனை சட்டத்தை குறித்து அரசு ஏதாவது விஞ்ஞான ரீதியான ஆய்வை நடத்தியதா?   பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஏற்படும் விளைவுகளைக் குறித்து அரசு சிந்தித்து பார்த்ததா?   12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்து கொலை செய்தாலும் பலாத்காரம் மட்டுமே செய்தாலும் தூக்கு தண்டனை எனும் போது குற்றவாளிகள் அந்த சிறுமியை உயிருடன் விடுவார்களா?” என மத்திய அரசுக்கு கேள்விகள் எழுப்பி உள்ளது.