டில்லி

ழங்கள் பழுக்க ரசாயனம் பயன்படுத்தினால் சிறைத் தண்டனை வழங்க வேண்டும் என டில்லி உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

விவசாயப் பொருட்களில் பெருமளவு ரசாயனம் கலந்திருப்பது குறித்து டில்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நல மனு பதிவு செய்யப்பட்டுள்ளது.  அதில் அனைத்து விவசாயப் பொருட்களிலும் ரசாயனம் கலந்த பூச்சி மருந்துகள் திளிக்கபடுவதாகவும் பழங்கள் விரைவில் பழுக்க கால்சியம் கார்பைட் பயன்படுத்துவதாகவும் இந்த ரசாயனங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை அளிக்கப்பட்டிருந்து.

இதை விசாரித்த டில்லி உயர்நீதிமன்றம் பழங்கள் பழுக்க கால்சியம் கார்பைட் பயன்படுத்துவது குறித்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு மையத்திடம் விளக்கம் கேட்டது.  அத்துடன் விவசாய அமைச்சகத்திடம் வாடிக்கையாளர்கள் இது போல ரசாயனம் உள்ளதைக் கண்டறியச் சாதனங்கள் உள்ளதா எனக் கேள்வி எழுப்பி இருந்தது.

இது குறித்து அரசு சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் ”மாம்பழம் போன்ற பழங்கள் பழுக்க கால்சியம் கார்பைட் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.   ஆயினும் இது குறித்து புகார்கள் வந்ததால் டில்லியில் மாதிரிகளை எடுத்து சோதனைக்கு அனுப்பப்பட்டது.

இதற்கான சாதனம் எதுவும்  கிடையாது.  இவற்றைப் பரிசோதனை மூலம் மட்டுமே கண்டறிய முடியும்.   இது வரை வந்த முடிவுகளின்படி  ரசாயனம் மூலம் பழுக்க வைக்கவில்லை என தெரிய வந்துள்ளது.  மேலும் முடிவுகள் வர வேண்டியது உள்ளது.” எனக் கூறப்பட்டிருந்தது.

இதனால் கவலை அடைந்த டில்லி உயர்நீதிமன்றம்,  “உணவுப் பொருட்களில் ரசாயனம் கலப்பது மிகவும் கொடுமையானது.   கால்சியம் கார்பைட் மூலம் பழுக்க வைப்பது அதில் விஷத்தைச் சேர்ப்பதற்குச் சமமாகும்.   இவ்வாறு செய்வோருக்கு அவசியம் சிறைத் தண்டனை வழங்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளது.