எப்போது எப்ஐஆர் பதிவு செய்வீர்கள்? கபில் மிஸ்ரா வீடியோ வெளியிட்டு விளாசிய டெல்லி ஹைகோர்ட்

--

டெல்லி: டெல்லியில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய பாஜகவின் கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர் உள்ளிட்டோர் மீது FIR பதியும்படி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வடகிழக்கு டெல்லியில் 2நாட்களாக சிஏஏ எதிர்ப்பு மற்றும் ஆதரவு போராட்டங்கள் வன்முறையில் முடிந்திருக்கிறது. இந்துத்துவா அமைப்பினர் நடத்திய வெறியாட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

வன்முறையால் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இஸ்லாமியர்களின் பள்ளிவாசல்களை சூறையாடி அங்கு இந்து அமைப்புகளின் கொடியை நிறுவி அராஜகப் போக்கை இந்துத்துவா அமைப்பு கடைபிடித்துள்ளது.

இந்தச் சம்பவங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வீடியோக்களாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், டெல்லியில் நடந்த கலவரத்துக்கு யார் காரணம் என சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் முரளிதர் மற்றும் தல்வந்த் சிங் அமர்வு டெல்லி காவல்துறை ஆணையரை ஆஜராகும்படியும், வன்முறையின்போது பதிவான சி.சி.டி.வி காணொளிகளை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.

பின்னர் வழக்கு விசாரணைக்கு வந்த போது, வன்முறையைத் தூண்டும் வகையில் பாஜகவை சேர்ந்த கபில் மிஸ்ரா, அனுராக் தாகூர் ஆகியோர் பேசிய வீடியோக்களை பார்க்கவில்லையா என போலீஸ் தரப்பிடம் நீதிபதி முரளிதர் கேட்டுள்ளார்.

அதற்கு போலீஸ் தரப்பு இல்லை என்றதும் கோபமடைந்த முரளிதர், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, காவல்துறை அதிகாரி ராஜேஷ் தியோ உள்ளிட்டோர் முன்னிலையில் கபில் மிஸ்ரா ஆகியோர் பேசியதை ஒளிபரப்பியுள்ளார். அப்போது நீதிபதிக்கும், துஷார் மேத்தாவுக்கும் இடையே நடந்த வாதங்கள் வருமாறு:

நீதிபதி முரளிதர்: வீடியோக்கள் போலியானவை என்று சொல்வது காவல்துறைக்கு உதவாது.

துஷார் மேத்தா: நீங்கள் ஒரு முடிவு எடுத்துவிட்டீர்கள். அதனால் இதற்கு மேல் வாதிட முடியாது.

நீதிபதி முரளிதர்: இதற்கு மேல் வாதிட என்ன உள்ளது ? அரசு எதையும் செய்யவில்லை.

துஷார் மேத்தா: நாங்கள் செய்துக்கொண்டு தான் இருக்கிறோம்.

நீதிபதி முரளிதர்: எப்போது ? டில்லி எரிந்து சாம்பலான பிறகா ? பாஜக தலைவர்கள் மீது FIR பதியக் கூடாது என்று சொல்ல என்ன காரணம் ?

துஷார் மேத்தா: நான் சொல்ல ஒன்றும் இல்லை.

நீதிபதி முரளிதர்: இல்லை மேத்தா, உங்களிடம் இதுகுறித்து விவாதித்து முடிவெடுக்க தான் விரும்புகிறோம்.

துஷார் மேத்தா: சட்ட அமைப்பாக உங்களால் இதை செய்ய முடியாது.

நீதிபதி முரளிதர்: நாங்கள் ஓர் சட்ட அமைப்பு என்பதால் தான் இதை செய்ய வேண்டும் என்கிறோம்.

இவ்வாறு வாதங்கள் நடைபெற்றது.

You may have missed