ஐஎன்எக்ஸ் வழக்கு: ப.சிதம்பரத்தை கைது செய்ய நவம்பர் 29ந்தேதி வரை தடை நீட்டிப்பு

டில்லி:

என்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், ப.சிதம்பரத்தை கைது செய்ய அடுத்த மாதம் (நவம்பர்) 29ந்தேதி வரை தடையை நீட்டித்து டில்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

மத்தியநிதி அமைச்சராக  ப.சிதம்பரம் இருந்தபோது,   கடந்த2007ம் ஆண்டு,  பீட்டர் முகர்ஜி,  அவரது மனைவி இந்திராணி ஆகியோருக்கு சொந்தமான ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவன அன்னிய முதலீட்டுக்கு விதிமுறைகளை மீறி  அனுமதி வழங்கப்பட்டதாகவும், இதில்  ரூ.305 கோடி அளவில் முறைகேடு நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த முறைகேட்டில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் ஈடுபட்டிருந்ததாக கூறி குற்றம் சாட்டப்பட்டு, இது தொடர்பாக ஏற்கனவே கார்த்தி சிதம்பரம் சிறையில் அடைக்கப் பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

இந்த முறைகேடு தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர்  ப.சிதம்பரத்திற்கும் சிபிஐ சம்மன் அனுப்பியது. அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில் ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையில், ப.சிதம்பரம் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கும் ஆஜராகியிருந்தார்.

இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை பல முறை நீட்டித்து வந்த டில்லி உயர்நீதி மன்றம்,  இன்றைய விசாரணையின்போது மேலும் நீட்டித்து உள்ளது.

அதன்படி, ப.சிதம்பரத்தை கைது செய்ய நவம்பர் 29ந்தேதி வரை தடையை நீட்டித்து உத்தரவிட்டது.