டில்லி

பேருந்துகளில்  பயணம் செய்யும் மகளிருக்கு ஆபத்தில் உதவ ஒரு பாதுகாப்பு சுவிட்ச் ஒன்றை அமைக்க மத்திய அரசு டில்லி ஐஐடி யிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

நாட்டில் பெண்கள் பாதுகாப்பு மிகவும் குறைந்து வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.    இந்த  புகார்களினால் மத்திய அரசு மிகவும் கவலை அடைந்துள்ளது.   பொதுவாக பேருந்துகளில் அல்லது ரெயிலில் பயணம் செய்யும் மகளிருக்கு பல தொல்லைகள் உண்டாகின்றன.    மேலும் சாலைகளில் நடந்து செல்லும் பெண்கள் தங்களுக்கு நேரிடும் அபாயங்களை உடனடியாக புகார் செய்ய முடிவதில்லை.

இதை ஒட்டி பெண்களுக்கான விசேஷ மொபைல் செயலி ஒன்றை நிறுவிய அரசு அதை தற்போது உத்திரப் பிரதேச மாவட்டத்தில் சோதனை செய்து வருகிறது.  பெண்கள் பாதுகாப்புக்காக மத்திய அரசு நிர்பயா ஃபண்ட் என்னும் நிதி உதவித் திட்டத்தை அமுல் படுத்தி உள்ளது.    இந்த நிதி உதவி திட்டத்தின் கீழ் ஐஐடி யுடன் இணைந்து அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கு ஒரு பாதுகாப்பு சுவிட்ச் ஒன்றை அமைக்க உள்ளது.

ஆபத்தில் இருக்கும் மகளிர் இந்த பாதுகாப்பு சுவிட்சை அழுத்தினால் உடனடியாக அதிலிருந்து ஒலி கிளம்பும்.   அதன் மூலம் பலரது கவனமும் அங்கு திரும்பும் வாய்ப்புள்ளது.   அத்துடன் இது குறித்து நடத்துனர், ஓட்டுனர் மற்றும் அருகில் உள்ள காவல் நிலையம் ஆகிய இடங்களுக்கு உடனே தகவல் சென்று விடும்.    டில்லி பேருந்துகளில் விரைவில் இந்த அமைப்பு சோதனைக்கு உட்படுத்டப் பட உள்ளது.   அதன் பிறகு நாடெங்கும் உள்ள அனைத்து பேருந்துகளிலும் இது கட்டாயம் ஆக்கப்பட உள்ளது.