டில்லி

சிபிஎஸ்ஈ பாடத்திட்ட 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாட்கள் பாதுகாப்பின்றி டில்லி மெட்ரோ ரெயிலில் எடுத்துச் செல்லப்பட்டது பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

தற்போது சி பி எஸ் ஈ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது.   தேர்வு நடைபெறும் பள்ளிகளில் இருந்து விடைத்தாள்கள் மிகவும் பாதுகாப்பாக அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்படுவது வழக்கம்.   சீல் செய்யப்பட்ட விடைத்தாள்கள் கொண்ட பார்சலை பள்ளியின் வாகனத்தில் ஒரு ஆசிரியர் நேரடியாக எடுத்துச் சென்று அலுவலகத்தில் சேர்ப்பார்.    இவ்வாறு விடைத்தாட்கள் எடுத்துச் செல்லும் போது காவல்துறையினர் பாதுகாப்புக்கு உடன் செல்வார்கள்.

டில்லி மெட்ரோ ரெயிலில் வழக்கறிஞர் தருண் நாரங்க் என்பவர் துவாரகா கோர்ட் ரெயில் நிலையத்தில் இருந்து ஜனக்புரிக்கு பயணம் செய்துள்ளார்.   அப்போது அவருடன் வந்த பயணி ஒருவர் சீல் செய்யப்பட்ட பார்சலுடன் பயணம் செய்துக் கொண்டிருந்தார்.   தருண் இது குறித்து விசாரித்த போது அவர் தான் மாதா கஸ்தூரி தேவி சீனியர் செண்டரி பள்ளியில் பணி புரிவதாகவும்,  அந்த பார்சலில் 12ஆம் வகுப்பு ரசாயன விடைத்தாட்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.   மேலும் அந்த பார்சலை சி பி எஸ் ஈ தலைமை அலுவலகத்துக்கு சேர்க்க எடுட்துச் செல்வதாகவும் கூறி உள்ளார்.

இது குறித்து தருண் சி பி எஸ் ஈ தேர்வு கட்டுப்பாட்டு அலுவலருக்கு  புகார் ஒன்றை அனுப்பி உள்ளார்.    சி பி எஸ் ஈ தலைமை அலுவலகம் அது போல புகார் கடிதம் வரவில்லை என மறுத்துள்ளது.  மேலும் அலுவலர் ஒருவர், “இது மிகவும் பாதுகாப்பான ஆவணம் என்பதால் அதை எடுத்துச் செல்ல விதிமுறைகள் உண்டு.   இவ்வாறு எடுத்துச் செல்ல அனுமதி இல்லை”  என தெரிவித்துள்ளார்.

மாதா கஸ்தூரி தேவி சீனியர் செகண்டரி பள்ளி நிர்வாகம் இது குறித்து எதுவும் தெரிவிக்க மறுத்துள்ளது.