டெல்லி கோரம் – 2 குழந்தைகளைக் கொன்று தானும் தற்கொலை செய்த வேலையில்லா தந்தை!

புதுடெல்லி: வேலையில்லாத காரணத்தால், 44 வயது நபரொருவர், தனது இரண்டு குழந்தைகளைக் கொலை செய்ததுடன், தானும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட கோர சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.

வடகிழக்கு டெல்லியிலுள்ள ஷாலிமர் பாக் என்ற பகுதியில்தான் இச்சம்பவம் நடந்துள்ளது. மதூர் மலானி என்ற பெயருடைய அந்த நபர், தனது குழந்தைகளைக் கொலைசெய்த பின்னர், ‍ஹைதேர்பூர் பட்லி மோர் ரயில் நிலையத்தில் மெட்ரோ ரயிலின் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

முதற்கட்ட போலீஸ் விசாரணையில், இவர் மனஅழுத்தப் பிரச்சினையில் இருந்தது தெரியவந்துள்ளது. இந்தக் கொலைகள் குறித்து குழந்தைகளின் தாயார் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

கொல்லப்பட்ட குழந்தைகளில் மகனுக்கு 6 வயதும், மகளுக்கு 14 வயதும் ஆகிறது. மகளின் பெயர் சுமிக்சா மற்றும் மகனின் பெயர் சிரான்ஷ். சுமிக்சாவின் உடல் கட்டிலின் மீதும், சிரான்ஷின் உடல் மற்றொரு அறையிலும் கண்டெடுக்கப்பட்டது.

குழந்தைகளின் தாய் வெளியில் சென்றிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. அவர் திரும்பி வந்தபோது கதவு பூட்டப்பட்டிருந்தது. நீண்டநேரம் கதவைத் தட்டியும் திறக்கப்படாத காரணத்தால், வீட்டு உரிமையாளரிடம் மாற்று சாவி வாங்கி கதவு திறக்கப்பட்டது. பல மாதங்களாக வேலையில்லாத காரணத்தால், மனஅழுத்தத்திற்கு உள்ளான மதூர் மலானி இவ்வாறு நடந்துகொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

You may have missed