Random image

டில்லி மெட்ரோ சாதாரண மக்களுக்கு எட்டாமல் போனது : கெஜ்ரிவால்

டில்லி

டில்லி மெட்ரோ ரெயில் கட்டண உயர்வால் அது சாதாரண மக்களுக்கு எட்டாமல் போய் விட்டது என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார்.

இந்திய பெருநகரங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது.   அதே நேரத்தில் மெட்ரோ ரெயில் இயக்க செலவு காரணமாக கட்டணங்கள் உயர்வாக உள்ளன.  இந்த கட்டணங்கள் அனைத்து பெரு நகரங்களிலும் அதிகமாக உள்ளதாக மக்கள் கருதுகின்றனர்.

டில்லி மெட்ரோவில் கடந்த 2017 ஆம் வருடத்திலிருந்து இரண்டு முறை கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.  இதனால் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 40% வரை குறைந்துள்ளது.    அதாவது கடந்த 2016 ஆம் வருடம் டில்லி மெட்ரோ பயணிகள் எண்ணிக்கை 40 லட்சமாக இருந்தது.  தற்போது 2018 ஆம் வருடம் அந்த எண்ணிக்கை 26 லட்சமாக குறைந்துள்ளது.

இது குறித்து டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “நகரின் முக்கியமான போக்குவரத்து சேவை சாதாரண மக்களுக்கு எட்டாமல் போய் உள்ளது.  இதற்காக நான் டில்லி முதல்வர் என்னும் வகையில் கடும் வேதனை அடைகிறேன்.   டில்லி மெட்ரோவில் பயணம் செய்வதை நிறுத்தியவர்கள் சாலைப் பயணம் மேற்கொள்வதால் டில்லியில் மாசு மேலும் அதிகரிக்கிறது” என டிவிட்டரில் பதிந்துள்ளார்.