elh

டில்லி

நேற்று இரவு டில்லியில் மெட்ரோ ரயில் கதவு திறந்தபடி ஓடியது பயணிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மெட்ரோ ரெயில் ஒரு ரெயில் நிலையம் வந்ததும் கதவு திறக்கப்பட்டு, பின் மூடியபின் பயணத்தை துவக்கும்.  இடையில் எங்கும் கதவு திறந்திருக்காது.  ஆனால் நேற்று டில்லியில் சவேரி பஜார் – காஷ்மீரி கேட் நிலையங்களுக்கிடையே மெட்ரோ ரெயில் கதவுகள் திறந்த நிலையில் சென்றுள்ளது.  இதைக் கண்ட பயணிகள் பதட்டம் அடைந்தனர்.

அதை செல்ஃபோனில் பலர்  படம் பிடித்துள்ளனர்.  பிறகு மெட்ரோ ரெயில் நிர்வாகத்திடம் பயணிகள் புகார் அளித்துள்ளனர்.  கதவை மூடாமல் ரெயிலை இயக்கிய ஓட்டுனர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வற்புறுத்தி உள்ளனர்.  அதிகாரிகள் அவர்களை சமாதனப்படுத்தி அனுப்பி உள்ளனர்.

இதைப் பற்றி டில்லி மெட்ரோ உயர் அதிகாரி ஒருவர், “கதவு மூடாமல் மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டது வருத்தத்துக்குரியது.  சில நுட்பமான காரணங்களால் அவ்வாறு ஏற்பட்டுள்ளது.  உடனடியாக ஓடும் ரெயிலில் ஊழியர்கள் அதை பழுது பார்த்து விட்டனர்.

மேலும் சவேரி பஜாரிலிருந்து காஷ்மீரி கேட் வரைதான் ஒரே ஒரு கதவு திறந்திருந்தது.  ஆனால் அடுத்த ரெயில் நிலையத்தை அடையும் முன்பு அது சரி செய்யப்பட்டது.  பயணிகள் விபத்து ஏற்படுமோ என அஞ்சியதால் அவர்களுக்கு பாதுகாப்புக்கு போலீஸ் காவலர்களும் உடன் அனுப்பி வைக்கப்பட்டனர்” என தெரிவித்தார்.