டில்லி:

2018ம் ஆண்டில் விஸ்தரிப்பு பணிகள் காரணமாக டில்லி மெட்ரோ ரெயில் சேவை உலகளவில் 4வது இடத்தை பிடிக்கவுள்ளது.

டில்லி மெட்ரோ ரெயில் திட்டத்தில் தற்போது 231 கி.மீ. தொலைவுக்கு பல வழித்தடங்களில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் தொடங்கப்பட்ட மெஜந்தா வழித்தடமும் இதில் அடக்கம்.

வரும் மார்ச் மாதம் முதல் மேலும், பல புதிய வழித்தடங்களில்  120 கி.மீ., தொலைவுக்கு ரெயில்களை இயக்க டில்லி மெட்ரோ ரெயில் கழகம் திட்டமிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது. மொத்தம் 350 கி.மீ. தொலைவுக்கு மேல் ரெயில்களை டில்லி மெட்ரோ இயக்கவுள்ளது. இதன் மூலம் உலகளவில் 4வது பெரிய திட்டமாக டில்லி மெட்ரோ ரெயில் திட்டம் விளங்கும்.

தற்போது 174 ரெயில் நிலையங்களுடன் 9வது பெரிய மெட்ரோ ரெயில் திட்டமாக டில்லி உள்ளது. 3ம் கட்ட மெட்ரோ பணிகள் முடிந்தவுடன் 375 கி.மீ. வழித்தடம் கிடைத்துவிடும். இதில் நொய்டா&கிரேட்டர் நொய்டா வழித்தடமும் அடங்கும். இதில் 52 ரெயில் நிலையங்களை டில்லி மெட்ரோ உருவாக்கியது.

தற்போது இதை நொய்டா மெட்ரோ ரெயில் கழகம் ரெயில்களை இயக்கி வருகிறது. இதன் மூலம் சீனாவின் சாங்காய், பெய்ஜிங் மற்றும் லண்டனை தொடர்ந்து டில்லி 4வது இடத்தை பிடிக்கும்.