புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே நீடித்து வந்த நட்புறவு விரிசலடைந்த நிலையில் பாகிஸ்தானில் ஒருகிலோ தக்காளி ரூ.250 க்கு விற்கப்படுகிறது.

tomato

கடந்த 14ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பாகிஸ்தானை தலைமயிடமாக கொண்டது. இதன் காரணமாக இந்திய வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டியது.

இந்திய வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இந்திய அரசு தெரிவித்த நிலையில், பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சுமார் 200 சதவிகிதம் வரியை உயர்த்தியது. அதுமட்டுமின்றி, வர்த்தக ரீதியாக வழங்கப்பட்ட மிகவும் வேண்டத்தக்க நாடு என்ற அந்தஸ்தை பாகிஸ்தானிடம் இந்தியா திரும்ப பெற்றது.

இதனை தொடர்ந்து இந்தியாவுக்கு இனி பாகிஸ்தானுடன் எந்த உறவும் இல்லை என மத்திய அரசு அறிவித்ததுடன் பாகிஸ்தானிற்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளன. அதுபோல் அந்நாட்டில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானிற்கு தக்காளி ஏற்றுமதி செய்யப்படாததால் அந்நாட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.250 க்கு விற்கப்பட்டு வருகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். மத்திய பிரதேசம், டெல்லி, காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் சுமார் 3000 டன் தக்காளி பாகிஸ்தானிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.