புதுடெல்லி: நிஜாமுதீன் மசூதியில் நடைபெற்ற மத மாநாட்டில் கலந்துகொண்டவர்களில் இதுவரை 100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அந்த மாநாட்டில் கலந்துகொண்டோரில் இதுவரை 7பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்த இடத்திலிருந்து கிட்டத்தட்ட 2100 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 441 பேர் வைரஸ் அறிகுறியுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த இடத்தில் பல நூற்றுக்கணக்கானோர் வாரக்கணக்கில் தங்கியிருந்தனர். 1100க்கும் மேற்பட்டோர் டெல்லியின் வெவ்வேறு பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்களை கண்டறிந்து சோதனை செய்யுமாறு, மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

அம்மாநாட்டில் கலந்துகொண்டோரில், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 50 பேருக்கும், டெல்லியின் 24 பேருக்கும், தெலுங்கானாவின் 21 பேருக்கும், ஆந்திராவின் 18 பேருக்கும்இ அந்தமான் தீவுகளைச் சேர்ந்த 10 பேருக்கும், அஸ்ஸாம் மற்றும் காஷ்மீரைச் சேர்ந்த தலா ஒருவருக்கும் கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டுள்ளது.