டெல்லி:

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேரும் இன்று அதிகாலை தூக்கிலிடப்பட்ட நிலையில், இதற்கு பல்வேறு மகளிர் அமைப்புகள் வரவேற்பு தெரிவித்து உள்ளன. அதுமட்டுமின்றி டெல்லி மக்கள் இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து உள்ளனர்.

மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கு கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. குற்றவாளிகளுக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டும், அதை நிறை வேற்றுவதில் பல்வேறு சட்டச்சிக்கல்கள் எழுந்தன. இறுதியாக 4வது முறை அவர்களின் தூக்கு தண்டனை தேதி மாற்றப்பட்ட நிலையில், இறுதியாக நள்ளிரவு வேளையிலும் குற்றவாளிகள் தரப்பில் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கும் அதிகாலை 3.30 மணி அளவில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இன்று கால 5.30 மணிக்கு குற்றவாளிகள் 4 பேரும் தூங்கில் போடப்பட்டனர். அவர்களின் மரணம் உறுதி செய்யப்பட்டது.

இதன் காரணமாக நள்ளிரவு முதலே, திகார் சிறை அமைந்துள்ள பகுதி மக்கள் கூட்டங்களால் நிரம்பி வழிந்தது. குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்த செய்திகள் கிடைத்ததும், அங்கு கூடியிருந்த மக்கள் இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

திகார் சிறைக்கு வெளியே பெண்கள் உரிமை ஆர்வலர் யோகிதா பயானா உள்ளிட்ட மக்கள் கொண்டாடி இனிப்புகளை விநியோகித்தனர்,

அதிகாலை நேரத்திலேயே, குற்றவாளிகள் தூக்கில் போடப்பட்டதை மக்கள் ஆரவாரமாக கொண்டாடி வருவது… மக்களின் மனநிலை மாறி வருவதையே காட்டுகிறது….