மும்முனை தாக்குதலால் பீதியில் டில்லி மக்கள்

டில்லி

டில்லி வாழ் மக்கள் கொரோனா, காற்று மாசு, கடும் குளிர் என மும்முனை தாக்குதலில் சிக்கி உள்ளனர்.

கொரோனா பரவுதலை தடுக்க சமுதாய இடைவெளி அவசியம் எனக் கூறப்படுகிறது.  அதே வேளையில் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் நடந்த ஆய்வில் இதற்கு நேர்மாறான தகவல்கள் வெளியாகி உள்ளன.  இதில் நோய் கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ள இடைவெளி 6 அடியையும் தாண்டி சுவாச நீர்த்துளிகள் பயணிப்பது தெரிய வந்துள்ளது.  இதனால் கொரோனா 6 அடிக்கு அதிக தூரத்திலும் பரவும் என கூறப்படுகிறது.

இந்த சுவாச நீர்த்துளிகள் வறண்ட மற்றும் வெப்பம் மிகுந்த இடங்களில் ஆவி ஆகி விடுகிறது.  ஆனால் குளிர் மற்றும் மழைக் காலங்களில் நீண்ட நேரம் இந்த துளிகள் காய்வது இல்லை. அது போல் மாசுப்படலம் அதிகமாக இருக்கும் இடங்களில் இருமும் போதும் தும்மும் போது சுவாச நீர்த் துளிகள் அதிகம் வெளியாகிறது.  மேலும் இந்த துளிகள் இது போன்ற சூழ்நிலைகளில் கீழே விழ மிகவும் நேரமாகும்.  ஆகவே மனிதர்கள் இந்த துகள்களைச் சுவாசிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

நாடெங்கும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் வேளையில் டில்லியில் மீண்டும் பாதிப்பு அதிகரித்து வருகிறது.  இது கொரோனாவின் இரண்டாம் கட்ட பரவலாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.  அத்துடன் கடந்த சில நாட்களாகக் காற்று மாசு மற்றும் குளிர் அதிகரித்து வருகிறது.  இந்த வருடம் உறையும் குளிருக்கும் கீழே செல்ல வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இவை காரணமாக டில்லி மக்கள் மும்முனை தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர்.  இது மக்களிடையே கடும் அச்சத்தை உண்டாக்கி இருக்கிறது.  டில்லி நகரில் வீடின்றி சாலை ஓரம் வசிக்கும் மக்கள் குறித்த கணக்கெடுப்பை மாநகராட்சி தொடங்கி உள்ளது.   ஏற்கனவே தேசிய ஊரடங்கால் மக்களில் பலர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.  இந்நிலையில் இந்த மும்முனை தாக்குதல் அவர்களுக்கு மேலும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.