டெல்லி:

காவல்துறையினர் மீத வழக்கறிஞர்கள் தாக்கியதை கண்டித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி யும் இன்று காலை முதலே டெல்லி  காவல்துறையினர் சீருடையுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

காவல்துறை ஆணையரின் வேண்டுகோளை ஏற்க மறுத்து, காலை முதலே ஆயிரக்கணக்கான காவல்துறை யினர்  போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பரபரப்பு நிலவி வருகிறது.

கடந்த 2ந்தேதி நடைபெற்ற காவல்துறையினர், வழக்கறிஞர் மோதலில் பல காவல்துறையினர் தாக்கப்பட்டும், காவல்துறை வாகனங்கள் தீ வைத்தும் எரிக்கப்பட்டது. இந்த மோதலில் இரு தரப்பினரும் காயம் அடைந்துள்ள நிலையில், காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நேற்று வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், போலீசை தாக்கிய வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் தலைமை அலுவலகம் எதிரே இன்று காலை முதல் காவல்துறையினர் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்போது 6 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அதன்படி,

1. இடைநீக்கம் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரியை மீண்டும் பணியில் அமர்த்தவும்

2. காயமடைந்த போலீஸ் அதிகாரிக்கு இழப்பீடு வழங்க வேண்டும்

3. வக்கீல்களுக்கு எதிராக நடவடிக்கை தேவை

4. இந்த விவகாரம் தொடர்பாக ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

5. போலீஸ்காரர்களைத் தாக்கிய நபர்களை அடையாளம் காட்ட வேண்டும்

6. கீழமை அளவிலுள்ள போலீசாருக்கும் சங்கம் அமைக்க வேண்டும்

இதுதொடர்பாக மாநில காவல்துறையிடம், மத்திய உள்துறை விசாரணை நடத்திய நிலையில், காவலர்கள் போராட்டத்தை தடுப்பது குறித்து மத்திய மாநில அரசு அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக டெல்லியில் பரபரப்பு நிலவி வருகிறது.