பட்டாசு வெடிப்பு தடை உத்தரவு : டில்லியில் முதல் வழக்கு பதிவு

டில்லி
உச்சநீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசு வெடித்த இளைஞர் ஒருவர் மீது முதல் முதலாக வழக்கு பதியப்பட்டுள்ளது.


தலைநகர் மாசு படுவதைத் தடுக்க டில்லியில் பட்டாசுகள் வெடிக்கக் கூடாது என வழக்கு தொடரப்பட்டது. அதை ஒட்டி உச்சநீதிமன்றம் கடந்த மாதம் பசுமை பட்டாசு எனக் கூறப்படும் புகை வராத சத்தம் எழுப்பாத பட்டாசுகளைத் தவிர மற்ற எதுவும் டில்லியில் விற்பனை செய்யக்கூடாது என உத்தரவிட்டது. டில்லியை தவிர மற்ற இடங்களில் மட்டுமே இத்தகைய பட்டாசுகள் விற்கப்பட வேண்டும் என விளக்கமும் அளிக்கப்பட்டது..

இந்நிலையில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மயுர் விகார் பகுதியில் உள்ள ஜிடி காலனியில் பட்டாசு வெடிப்பதாக தகவல்கள் வந்தன. அங்கு குடியிருக்கும் தமன்தீப் என்னும் 35 வயது இளைஞர் தனது மனைவியுடன் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்ததாக தகவல் அளித்த தீனபந்து மற்றும் அவருடைய மனைவி சங்கீதா ஆகிய இருவரும் காவல்துறையினரிடம் கடந்த 10 நாட்களாக அவர்கள் இவ்வாறு பட்டாசு வெடிப்பதாக தெரிவித்தனர்.

காவல்துறையினரிடம் சங்கீதா, “அவர்கள் மேலே இருந்து பட்டாசுகளை கொளுத்தி எங்கள் வீட்டு வாசலில் எறிகிறார்கள். அத்துடன் எங்கள் வீட்டு பால்கனியிலும் பட்டாசை எறிந்து வெடிக்க வைக்கின்றனர். நாங்கள் இது குறித்து மிகவும் அமைதியாக கூறினாலும் அவரும் அவர் மனைவியும் எங்களை கடுமையாக திட்டுகின்றனர்” என தெரிவித்தார்.

அதை ஒட்டி காவல்துறையினர் அங்கு குவிந்திருந்த பட்டாசு குப்பைகளை எடுத்து ரசாயன சோதனைக்கு அனுப்பி வைத்தனர். தமன் தீப் ஏற்கனவே வாங்கிய பட்டாசுகளை வெடிப்பதாக கூறி உள்ளார். மேலும் தாங்கள் புதிதாக பட்டாசு வாங்காததால் தங்கள் மீது தவறில்லை என அவர் மனைவியும் வாதிட்டுள்ளார். அதை ஒட்டி தமன்தீப் மீது முதல் குற்ற அறிக்கை பதியப்பட்டுள்ளது.

இது உச்ச நீதிமன்றம் விதித்த பட்டாசு வெடிக்க தடை உத்தரவின் கீழ் பதியப்பட்ட முதல் வழக்கு ஆகும்.