டில்லி:

பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டதும், அதற்காக 2 கோடி ரூபாய் லஞ்சம் தரப்பட்டதும் கடந்த ஏப்ரல் மாதமே டில்லி போலீசாருக்கு தெரியும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இரட்டை இலை சின்னத்தை பெற அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டில்லி போலீசார் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டார். அதேடு இந்த வழக்குக்காக கர்நாடக முன்னாள் உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரனின் உதவியாளர் என கூறப்படும் வி.சி.பிரகாஷ் என்பவரிடமும் டில்லி காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

அப்போது வி.சி பிகராஷ், இரட்டை இலை சின்னத்துக்காக தினகரன் லஞ்சம் கொடுத்தாரா என்பது குறித்து தனக்குத் தெரியாது என்றும், அதே நேரம் சசிகலாவுக்கு சிறையில் வசதி ஏற்படுத்தித்தருவதற்காக சிறை உயரதிகாரிகளுக்கு தினகரன் இரண்டு கோடி ரூபாய் தந்தது குறித்து தனக்கு தெரியும் என்றும் கூறியதாக சொல்லப்படுகிறது. ஆனால் டில்லி காவல்துறையினர் இது இந்த விவகாரத்தை ஏனோ மறைத்துவிட்டனர் என்றும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.