புதுடெல்லி: வன்முறையை தூண்டும் வகையிலான கருத்து என்று டெல்லியில் பாரதீய ஜனதாவைச் சேர்ந்த கபில் மிஸ்ரா பேசியதை பேஸ்புக் முதன்மை நிர்வாக அதிகாரி (சிஇஓ) மார்க் ஸூக்கெபர்க் உதாரணம் காட்டிய நிலையில், அதுகுறித்து டெல்லி காவல்துறை மவுனம் காக்கிறது.

அமெரிக்காவில் நடைபெற்றுவரும் கருப்பினத்தவர் போராட்டம் குறித்து அந்நாட்டு அதிபர் டிரம்ப் கூறிய வன்மமான கருத்துக்களை பேஸ்புக் நிறுவனம் நீக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தனது ஊழியர்களிடையே பேசிய மார்க் ஸூக்கெபர்க், டெல்லி பாரதீய ஜனதா தலைவரின் பேச்சை மேற்கோள் காட்டியுள்ளார்.

மோடி அரசு கொண்டுவந்த சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்டத்தை எதிர்த்து, டெல்லியில் அமைதியான முறையில் போராடி வந்த மக்களுக்கு எதிராக பேசிய கபில் மிஸ்ரா, “ஹேய், காவல்துறை இதை கவனத்தில் கொள்ளவில்லை என்றால், எங்கள் ஆதரவாளர்கள் களத்தில் இறங்கி, கூட்டத்தைக் கலைத்து விரட்டி, தெருவை சுத்தம் செய்வார்கள்” என்று பேசினார்.

அதனையடுத்து, இந்துத்துவா தீவிரவாதிகள் வன்முறையில் இறங்கி, வெறியாட்டம் ஆடியதில், 50 பேர் கொல்லப்பட்டதோடு, பல கோடி மதிப்பிலான சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. காவல்துறை கைக்கட்டி வேடிக்கைப் பார்த்தது.

ஆனால், மார்க் ஸூக்கெபர்க் குறிப்பிடுகையில், கபில் மிஸ்ராவின் பெயரை நேரடியாக குறிப்பிடவில்லை. ஆனால், அவர் குறிப்பிட்ட அந்த உரை, அவர் யாரை சுட்டுகிறார் என்பதை தெளிவுபடுத்தியது.

“உங்களுக்குத் தெரியுமா, சிலர் உண்மையிலேயே வன்முறையைத் தூண்டும் வகையில் செயல்பட்டால், பொதுவில், நீங்கள் அந்த உள்ளடக்கத்தை ஏற்ற வேண்டாம்” என்று தனது ஊழியர்கள் மத்தியில் பேசினார் மார்க் ஸூக்கெபர்க்.

ஆனால், மார்க் ஸூக்கெபர்க் கூறிய கருத்து தொடர்பாக, டெல்லி காவல்துறை மவுனம் சாதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.