மணம் புரியாவிடில் மரண அடி : காவல்துறை அதிகாரியின் மகன் மிரட்டல்
டில்லி
டில்லி காவல்துறை அதிகாரியின் மகன் ஒரு பெண்ணை அடித்து உதைக்கும் வீடியோவை காட்டி தனது காதலியை மிரட்டி உள்ளார்.
டில்லி காவல்துறை அதிகாரியாக பணி புரிபவர் அசோக் தோமர். இவரது மகன் ரோகித் தோமர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரோகித் ஒரு பெண்ணை அடித்து உதைக்கும் வீடியோ காட்சி வைரலானது. அதை ஒட்டி அந்த அடிபட்ட பெண் புகார் அளித்தார். அந்தப் புகாரில் அவர் ரோகித் தம்மை ஒரு பிபிஓ அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக குறிப்பிட்டார்.
மேலும் இது குறித்து புகார் அளிக்கப் போவதாக கூறியதால் தன்னை ரோகித் சரமாரியாக அடித்து உதைத்ததாகவும் தெரிவித்தார். அதை ஒட்டி ரோகித் கைது செய்யப்பட்டார். தற்போது ரோகித் மீது மற்றொரு புகாரை வேறொரு பெண் அளித்துள்ளார். அந்த புகாரில், “நான் ரோகித் தோமரின் பெண் நண்பராக இருந்தேன். அவருடைய நடவடிக்கைகள் பிடிக்காததால் நான் விலகி விட்டேன்.
இருந்தும் என்னிடம் அடிக்கடி ரோகித் தொந்தரவு கொடுத்து வந்தார். தன்னை திருமணம் செய்துக் கொள்ளுமாறு வற்புறுத்தினார். நான் மறுத்தேன். முன்பு அவர் ஒரு பெண்ணை அடிக்கும் வீடியோவை காட்டி என்னையும் அது போல தாக்குவேன் என மிரட்டினார். அத்துடன் என்னிடம் தவறாக நடந்துக் கொள்ள முயற்சி செய்தார்.
நான் இதை அவருடைய தந்தையான காவல்துறை அதிகாரி அசோக் தோமரிடம் தெரிவித்தேன். அவர் தன் மகனை கண்டிக்காமல் என்னை மிரட்டினார். ரோகித் உடன் நான் நெருக்கமாக உள்ள புகைப்படங்களை வெளியிடுவேன் என கூறினார். அதன் பிறகு நான் டில்லியில் உள்ள திலக் நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தேன்” எனக் கூறி உள்ளார்.
ரோகித் கைது செய்யப்பட்ட நிலையில் அவருடைய தந்தை அசோக் தலைமறைவாகி உள்ளார். அவரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாந்த் சிங் டில்லி காவல் ஆணையரிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வற்புறுத்தியது குறிப்பிடத்தக்கது.
தேடப்பட்டு வரும் காவல்துறை அதிகாரி அசோக் தோமர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்