டில்லி:

2வது முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ள மோடி, மீண்டும் தனது வெளிநாட்டு சுற்றுப்பயணங் களை தொடங்கி உள்ளார். 2 நாட்கள் அரசு முறைப்பயணமாக இன்று காலை பூடான் நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.

பிரதமர் மோடி, கடந்த ஆட்சியில் ஒருமுறை பூடான் நாட்டுக்கு பயணமான நிலையில், தற்போது 2வது முறையாக  பூடான் நாட்டிற்கு பயணமாகி உள்ளார்.  இரண்டு நாள் அங்கு தங்கும் பிரதமர் மோடி, அங்கு இருநாட்டு நட்புறவு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது.

தமது பூடான்  பயணம் குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் நம்பகமான நட்பு நாடாகவும் அண்டை நாடாகவும் பூடான் விளங்குவதாகவும், இந்தியா-பூட்டான் இடையிலான நட்பு ஆழமானது பழமையானது என்று குறிப்பிட்டுள்ளர்.  தமது பயணம் மூலம் இந்த நட்பும் இருநாடுகளின் எதிர்காலமும் மேலும் வளம்பெறும் என்றும் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பூடான் செல்லும் பிரதமர் அந்நாட்டு மன்னர் மற்றும் பிரதமரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்து கிறார். பேச்சுவார்த்தையை தொடர்ந்து,  இந்தியா பூடான் இடையே ராணுவ , பாதுகாப்புத்துறை, நீர் மின்னுற்பத்தி, மின்சார கொள்முதல், வர்த்தகம், கலாச்சாரம், பொருளாதாரம் ஆகிய ஆறு துறை ஒப்பந்தங்களும், பூடான் கல்வித்துறை சார்பில், டெல்லி, மும்பை, கான்பூர் ஐ.ஐ.டிக்களுடனும், சில்சார் என்.ஐ.ஐ.டி.யுடனும் நான்கு தனித்தனி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.

பயணத்தின் இரண்டாம் நாளில் பூட்டானில் ராயல் பல்கலைக்கழகத்தின் இளம் மாணவர்களுடன் கலந்துரையாட இருப்பதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.

மோடியின் பூடான் வருகை குறித்து அங்குள்ள இந்திய தூதர் ருச்சிரா கம்போஜ், இன்று (ஆகஸ்ட் 17 ஆம் தேதி), பிரதமர் மோடி பரோ சர்வதேச விமான நிலையத்திற்கு வருவார், அதைத் தொடர்ந்து அவர் செம்தோகா த்சோங்கிற்கு செல்வார். அதையடுத்து,  தாஷிச்சோட்ஸோங்கிற்கு வருகை தருகிறார். அப்போது அவருக்கு அரசு சார்பில் மரியாதை அளிக்கப்படும். டொங்கில், பிரதமர் பூட்டானிய மன்னரை அல்லது ‘ட்ரூக் கயல்போ’, ஜிக்மே கேசர் நம்கீல் வாங்சக்கை சந்திப்பார். பிரதமர் மோடியின் நினைவாக சிப்ட்ரல் ஊர்வலமும் நடைபெறும் என்று தெரிவித்து உள்ளார்.