டெல்லி கலவரம் – காவல்துறை கேட்டதை தர மறுத்த தேர்தல் ஆணையம்!

இந்தாண்டு துவக்கத்தில், வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக, சந்தேகப் பட்டியலில் உள்ளோரை உறுதிசெய்யும் வகையில், மொத்தம் 3 மாவட்டங்களின் டிஜிட்டல் தேர்தல் தரவுதளத்திலுள்ள விபரங்களை, தேர்தல் கமிஷனிடம் கேட்டது டெல்லி மாநில காவல்துறை.

ஆனால், அந்த விபரத்தை தர மறுத்த தேர்தல் ஆணையம், தனது அலுவலகத்திற்கு நேரில் வந்து, வாக்காளர் பட்டியலை சோதித்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், டெல்லி காவல்துறை தரப்பில் அதை மறுத்ததோடு, அதனையடுத்த எந்த மேலதிக வேண்டுகோளும் தேர்தல் கமிஷனுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஓட்டுநர் உரிமத்தின் மூலம், புகைப்பட விபரங்களை அனுப்பி வைக்குமாறு போக்குவரத்து துறைக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் கமிஷனின் அறிவுரைப்படி, நேரில் சென்று சரிபார்ப்பதை டெல்லி காவல்துறை விரும்பவில்லை. பதிலாக, தேர்தல் கமிஷனிலுள்ள டிஜிட்டல்மய ஆவணங்களையே சரிபார்த்து, அதன்மூலம் சந்தேகிக்கப்படும் கலவரக்காரர்களை அடையாளம் காண விரும்பியதாக தொடர்புடைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவேதான், தேர்தல் கமிஷனிடம் மேலதிக கோரிக்கையை வைக்கவில்லையாம் டெல்லி காவல்துறை.

தேர்தல் கமிஷனின் தற்போதைய விதிமுறைப்படி, அப்படியான டிஜிட்டல் தகவல்களை வெளிப்புற விசாரணைக்காக தரக்கூடாது என்று கூறப்படுகிறது. அப்படியான விஷயங்கள் கட்டாயம் தேவைப்பட்டால், அவற்றை நீதிமன்ற உத்தரவின் மூலமே பெற முடியும்.

தேர்தல் கமிஷனிடமிருந்து மறுப்பு வந்த நிலையில், போக்குவரத்து துறையிடமிருந்து, கேட்கப்பட்ட விபரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன என்பதும் கவனிக்கத்தக்கது. தற்போது புகைப்படங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. புகைப்படங்களில் ஒற்றுமைகள் கண்டறியப்பட்டால், காவல்துறை சார்பில் மேலதிக விபரங்கள் கோரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.