“ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறார்கள் டெல்லி ஆட்சியாளர்கள்” – புகழும் சிவசேனா

மும்பை: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைப் பார்த்து, டெல்லியின் ஆட்சியாளர்கள் அஞ்சுகிறார்கள் என்று புகழ்ந்துரைத்துள்ளது சிவசேனா கட்சி.

சிவசேனாவின் கட்சிப் பத்திரிகையான சாம்னாவில், இவ்வாறு பாராட்டுரை வாசித்துள்ளது மராட்டிய மாநில கூட்டணி கட்சியான சிவசேனை.

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராவது ஒரு நல்ல விஷயம் என்றும் அக்கட்சி கூறியுள்ளது.

சாம்னாவில் கூறப்பட்டுள்ளதாவது, “டெல்லியின் ஆட்சியாளர்கள் ராகுல் காந்தியைப் பார்த்து பயப்படுகிறார்கள். அவ்வாறு அவர்கள் பயப்படவில்லை என்றால், ராகுல் குடும்பத்தின் மீது அவதூறுகளைப் பரப்ப வேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்படாது.

டெல்லியின் ஒரு சர்வாதிகாரி, தன்னை எதிர்த்து நிற்கும் ஒரு தனிமனிதரைப் பார்த்து அஞ்சுகிறார். அந்த ஒற்றை எதிர்ப்பாளர் கண்ணியமானவராக இருப்பதால்தான், டெல்லியின் அச்சம் நூறு மடங்கு அதிகரித்துள்ளது.

தன்னை ஒரு பலவீனமான தலைவர் என்று ஆட்சியாளர்கள் பிரச்சாரம் செய்து வந்தாலும், தனக்கு கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்திலும் அவர் அரசை தாக்கி வருகிறார். அவர் சாம்பலிலிருந்து எழும் பீனிக்ஸ் பறவையைப் போல் எழுகிறார்” என்று பாராட்டியுள்ளது சாம்னா.