டில்லி : சஃப்தர்ஜங் மருத்துவமனை மருத்துவர்கள் வேலை நிறுத்தம்

டில்லி

புகழ்பெற்ற சஃப்தர்ஜங் மருத்துவமனையில் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடு பட்டதால் மருத்துவமனை ஸ்தம்பித்தது.

டில்லி சஃப்தர்ஜங் மருத்துவமனையில், நேற்று காலை வெளி நோயாளிகள் பிரிவுக்கு ஒரு பெண் கர்ப்ப கால சிகிச்சைக்காக வந்திருந்தார்.   பகல் 2.30 மணி வரை  அவர்  கவனிக்கப் படவில்லை.  இதனால் கோபமடைந்த அவர் அங்கிருந்த பெண் மருத்துவரை அடித்து விட்டார்.  இதனால் மருத்துவமனையில் பெறும் பரபரப்பு ஏற்பட்டது.  இந்த சம்பவம் குறித்து சஃப்தர்ஜங் என்க்ளேவ் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.   இந்த தாக்குதலை கண்டித்து வேலை நிறுத்தத்தில் மருத்துவர்கள் ஈடுபட்டனர்.

மருத்துவர்கள் சங்கத் தலைவர் தீர் சிங், “இது போல சம்பவங்கள் நிகழ்வது இங்கு சகஜமாகி விட்டது.  எங்களுக்கு  பாதுகாப்பு என்பது கொஞ்சம் கூட இல்லாமல் போய் விட்டது.  போதுமான மருத்துவர்கள் இல்லாததே இந்த தாமதத்துக்கு காரணம்.  அதை நிர்வாகமும் கண்டுக் கொள்வதில்லை.   அது நோயாளிகளுக்கும் தெரிவதில்லை.  எனவே,எங்களின் பாதுகாப்பைக் கோரியும், மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கோரியும் நாங்கள் கால வரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கி உள்ளோம்” எனக் கூறி உள்ளார்.

இந்த வேலை நிறுத்தத்தால் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு உட்பட பல பிரிவுகளிலும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப் படவில்லை.  வரும் நோயாளிகள் வாயிலில் நுழையும் போதே காவலாளிகளால் திருப்பி அனுப்பபடுகின்றனர்.