டில்லி

44 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் டில்லியின் மேலும் ஒரு மருத்துவமனை மூடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில்  டில்லி 2625 நோயாளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.   முதல் இடத்தில் 7628 பேர்களுடன் மகாராஷ்டிராவும் இரண்டாம் இடத்தில் 3071 பேர்களுடன் குஜராத் மாநிலமும் உள்ளது.  டில்லியில் 54 பேர் உயிர் இழந்துள்ளனர்.  869 பேர் இதுவரை குணம் அடைந்துள்ளனர்.

வடக்கு டில்லி பகுதியில் அமைந்துள்ள இந்து ராவ் மருத்துவமனை மிகப் பெரிய மருத்துவமனை ஆகும்.  இந்த மருத்துவமனையில் பல பிரிவுகளில் மாறி மாறி பணி புரிந்து வந்த செவிலியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையொட்டி அந்த மருத்துவமனை மூடப்பட்டு  மருத்துவமனை முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

இதையொட்டி அனைத்து மருத்துவமனை ஊழியர்களுக்கும்  கொரோனா பரிசோதனை நடந்தது.  இதில் பாபு ஜகஜீவன் ராம் மருத்துவமனையில் உள்ள 44 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளது உறுதி ஆகி உள்ளது..  எனவே இந்து ராவ் மருத்துவமனை மூடப்பட்ட 24 மணி நேரத்துக்குள் இன்னொரு மருத்துவமனையான ஜகஜீவன் ராம் மருத்துவமனையும் மூடப்பட்டுள்ளது.

தற்போது இரு மருத்துவமனைகளும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.   மேலும் மற்ற மருத்துவமனை ஊழியர்களின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியது உள்ளதால் இந்த பாதிப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.