சென்னை:

இந்தியாவில் மக்கள் வாழ்க்கைத்தரம், சிறந்த கட்டமைப்பு கொண்ட நகரங்களில் திருவனந்தபுரம் முதல் இடத்தை கைப்பற்றியுள்ளது. இரண்டாம் இடத்திலிருந்த டெல்லி, ஒன்பதாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இந்திய நகரங்களின் அமைப்பு, நிர்வாகம், மக்கள் வாழ்க்கைச் சூழல் குறித்து ஜனாக்ரஹா குடியுரிமை மற்றும் ஜனநாயகத்துக்கான மையம் என்ற நிறுவனம் ஆண்டுதோறும் ஆய்வு நடத்தி வருகிறது.

இந்த ஆய்வில் டெல்லி, மும்பை, கல்கத்தா, சென்னை உள்ளிட்ட 21 நகரங்கள் இடம்பெறும்.
கடந்த 2016 ம் ஆண்டுக்கான இந்த நிறுவனம்நடத்திய ஆய்வறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையில் கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரம் முதல் இடத்திலும், புனே நகரம் இரண்டாம் இடத்துக்கும், கல்கத்தா மூன்றாம் இடத்துக்கும் முன்னேறியுள்ளன.

இதேபோல் ஒரிஸா தலைநகர் புவனேஸ்வர் 10 ஆவது இடத்தை கைப்பற்றியுள்ளது.
இது 2015 ல் 18 ம் இடத்தில் இருந்தது. பெங்களூரு 16 ம் இடத்திலும், லூதியானா, ஜெய்ப்பூர், சண்டிகர் ஆகிய நகரங்கள் முறையே 19, 20,21 இடங்களில் உள்ளன.
ஆய்வறிக்கையை வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசிய ஜனக்ரஹா குடியுரிமை மற்றும் ஜனநாயகத்துக்கான அமைப்பின் தலைமை நிர்வாகி விஸ்வநாதன்,
“லண்டன், நியூயார்க் உள்ளிட்ட வெளிநாட்டு நகரங்களோடு ஒப்பிட்டால் மிகவும் பின்தங்கியதாக உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
அதனால் இந்திய நகரங்களை இன்னும் மேம்படுத்தவேண்டிய அவசியம் இருப்பதாகவும்
அவர் கூறினார்.