டெல்லி மாநில எல்லைகள் மூடல்: அதிகபட்ச கொரோனா தாக்கத்தால் முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி: தலைநகர் டெல்லியில் எல்லைகள் அடுத்த ஒருவாரத்துக்கு சீல் வைக்கப்படுவதாக முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்து இருக்கிறார்.

கொரோனா தொற்றால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் டெல்லி 3வது இடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகள் அதிகரித்து வருவகிறது. மற்ற மாநிலங்களிலும் பாதிப்பு அதிகரிக்க டெல்லி காரணமாக இருக்கிறது.

இந் நிலையில் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களுக்கு காணொலி மூலம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

டெல்லியில் கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருவதால் அரியானா, உத்தரப் பிரதேசம், டெல்லி எல்லைகள் அடுத்த ஒரு வாரத்துக்கு மூடப்படுகிறது. அத்யாவசிய சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. குடிமக்களிடம் கருத்து கேட்டு அதன் பின்னர் இந்த சாலையை திறப்போம்.

இது குறித்து டெல்லி மக்கள் 88000 07722 என்ற எண்ணில் வாட்ஸ் அப் மூலம் கருத்து தெரிவிக்கலாம். delhicm.suggestions@gmail.com என்ற மின் அஞ்சலிலும் கருத்துகளைத் தெரிவிக்கலாம் அல்லது வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குள் 1031 என்ற எண்ணுக்கு அழைத்து கருத்தைப் பதிவு செய்யலாம்.

நாங்கள் எல்லைகளைத் திறக்கும் தருணத்தில், நாடு முழுவதிலுமிருந்து மக்கள் சிகிச்சைக்காக டெல்லிக்கு வருவார்கள். டெல்லி மருத்துவமனைகள் டெல்லி மக்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.

உங்கள் முதலமைச்சராக, நீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் ஒரு படுக்கை இருக்கும் என்று நான் உத்தரவாதத்தை என்னால் அளிக்க முடியும் என்றார்.

டெல்லியில் இதுவரை 20,000 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. 473 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1,000 க்கும் மேற்பட்ட புதிய நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்டன.

கார்ட்டூன் கேலரி