டில்லி:

பேரறிவாளன் உள்பட ராஜீவ்கொலை வழக்கு குற்றவாளிகள் ஏழு பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை விசிக தலைவர் திருமாளவளவன் முன்னிலையில் அற்புதம்மாள் சந்தித்தார்.

ராஜீவ்கொலை வழக்கு கைதிகளை விடுதலை செய்யலாம் என்று உச்சநீதி மன்றம் உத்தர விட்டுள்ள நிலையில், அவர்களை விடுக்க தமிழகஅரசும் தீர்மானம் இயற்றி கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளது.

ஆனால், இதில் சட்டச்சிக்கல் இருப்பதாக கூறி, கவர்னர் அலுவலகம் பதில் கூற மறுத்து வருகிறது.

இந்த நிலையில், தமிழக எம்.பி.யான விடுதலைசிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமா வளவன் மற்றும்  ரவிக்குமார் ஆகியோர், ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் விடுதலை தொடர்பாக, பேரறிவாளன் தாயார் அற்புதம்மாளை அமித்ஷாவை சந்திக்க ஏற்பாடு செய்தனர்.

அதன்படி இன்று டில்லியில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த அற்புதம்மாள், தனது மகன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மனு அளித்தார். அப்போது திருமாவளவன், ரவிக்குமார் உடனிருந்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அற்புதம்மாள்,  உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க திருமாவளவனும், ரவிக்குமாரும் ஏற்பாடு செய்து தந்தனர்,  உள்துறை அமைச்சரை சந்தித்தால் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் வந்து சந்தித்துள்ளன். விடுதலைக்காக 28 ஆண்டுகள் தொடர்ந்து போராடி வருகிறோம் விரைவில், ஆளுநரிடம் இருந்து நல்ல செய்தி வரும் என நம்புகிறேன் என்று கூறினார்.