டில்லியில் நடந்த திட்டமிட்ட இனப்படுகொலை : மம்தா பானர்ஜி தாக்கு

கொல்கத்தா

டில்லியில் நடந்தது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார்.

டில்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் நடந்த மோதலால் வன்முறை வெடித்தது  டில்லியின் வடகிழக்கு பகுதியிலுள்ள சீலம்பூர், ஜப்ராபத், சாம்பார்க் உள்ளிட்ட பல இடங்களில் பல பொதுச் சொத்துக்கள் எரிக்கப்பட்டன..  மசூதிகள் உள்ளிட்ட பல கட்டிடங்கள் தீக்கு இரையாகின.   இதுவரை சுமார் 47 பேர் வன்முறைக்கு பலியாகியுள்ளனர்.  நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அரசியல் தலைவர்கள் பலரும் இந்த வன்முறைக்காக  பாஜக அரசின் மீது  குற்றம் சாட்டி வருகின்றனர்.   மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி , “டில்லியில் நடைபெற்றுள்ள வன்முறை ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை ஆகும்.  இந்த இனப்படுகொலைக்கு  பாஜக அரசு இதுவரை மக்களிடம் மன்னிப்பு கேட்காமல் உள்ளது.  ஆனால் வெட்கமில்லாமல் மேற்கு வங்கத்தை காப்போம் என அக்கட்சியினர் கூறி வருகின்றனர்.

மேற்கு வங்கத்தில் அமித்ஷா நடத்திய பேரணியில் பாஜகவினர் ’துரோகிகளைச் சுட்டுத் தள்ளுங்கள்’ எனக் கோஷம் எழுப்பி உள்ளனர்.   அவ்வாறு கோஷம் எழுப்பிய மூவரை நாங்கள் கைது செய்துள்ளோம்.  இவர்களுக்குத் தண்டனை அளித்தே ஆக வேண்டும்.  ஆனால் டில்லியில் வன்முறையைத் தூண்டும் வண்ணம் பேசிய பாஜக தலைவர்கள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லையே.  அது ஏன்?” எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.

கார்ட்டூன் கேலரி